'முஸ்லிம்கள் தமது பிரதிநிதித்துவத்தை இழப்பர்'
உள்ளூராட்சி தேர்தல் அறுபதுக்கு நாற்பது என்ற முறையில் நடைபெறும் என அரசு தீர்மானித்திருப்பது சிறுபான்மை மக்களுக்கு செய்யும் அநியாயமாகும் என உலமா கட்சி தெரிவித்துள்ளது.
எம்மை பொறுத்தவரை வட்டார, மற்றும் தொகுதிவாரி தேர்தல் முறை என்பது சிறு பான்மை மக்களை நசுக்கும் நோக்குடனேயே கடந்த ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்டது என்பதை அன்றுமுதல் சொல்லி வருகிறோம். இதற்காக சிறுபான்மை இனத்தின் அமைச்சராக இருந்த மாகாணசபை, உள்ளூராட்சி அமைச்சர் அதாவுள்ளா பயன்படுத்தப்பட்டார்.
உலமா கட்சியை பொறுத்த வரை புதிய தேர்தல் முறையை நிராகரித்து வந்ததுடன் அப்படித்தான் தேவை என்றால் ஐம்பதுக்கு ஐம்பது என விகிதாசாரமும், தொகுதி முறையும் இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே இருக்கிறது. காரணம் இந்த புதிய முறை மூலம் கிழக்குக்கு வெளியே உள்ள முஸ்லிம்கள் தமது பிரதிநிதித்துவத்தை கணிசமாக இழப்பர்.
இன்றைய அரசாங்கத்தில் பதிவு பெற்ற அனைத்து சிறுபான்மை கட்சிகளும் அங்கம் வகித்தும் அறுபதுக்கு நாற்பது என முடிவு செய்துள்ளமை சிறுபான்மை கட்சிகளுக்கு கிடைத்த தோல்வியாகும். இது விடயத்தை ஆணித்தரமாக எடுத்து சொல்ல வேண்டிய எதிர் கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பு மவுனமாக இந்த அநீதிக்கு துணை போயுள்ளது.
ஆகவே உள்ளூராட்சி தேர்தல்கள் பழைய விகிதாசார முறைப்படி அல்லது ஐம்பதுக்கு ஐம்பது என்ற முறையிலாவது நடத்தப்பட வேண்டும் என உலமா கட்சி அரசை மீண்டும் கோருகிறது.
Post a Comment