ஜனாதிபதி மைத்திரிக்கு, நாமலின் நெத்தியடி
நாட்டின் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன சமூக வலைத் தளங்கள் தன்னை மிகக் கடுமையாக விமர்சிப்பதாக கூறித் திரிவதானது இந்த ஆட்சி பொது மக்களால் நிராகரிக்கப்படுகிறது என்ற செய்தியை அவரது வாயாலேயே ஏற்றுக்கொள்வதாக அமைந்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது,
இன்று உலகில் சமூக வலைத்தளங்களின் தாக்கம் அதிகம் உள்ளமை மறுக்க முடியாத உண்மையாகும். கடந்த ஆட்சி மாற்றத்தின் போது சமூக வலைத்தளங்களின் தாக்கம் மிகவும் உச்சத்தில் நின்றமையை அவதானிக்க முடிந்தது. பல சிறிய விடயங்கள் மிகவும் பூதாகரமான விடயங்களாக மக்களுக்கு வெளிக்காட்டப்பட்டன. எம்மை நோக்கி பல கேள்விகளும் எழுப்பப்பட்டன. இதற்கு எம்மால் இயன்றளவு பதில் வழங்க முயற்சித்த போதும் மக்கள் அவற்றையெல்லாம் ஏற்கும் மனோ நிலையில் இல்லாதவாறு மக்கள் மனங்கள் ஊடகங்கள் வாயிலாக மாற்றப்பட்டிருந்ததன.
ஜனாதிபதி மைத்திரி தனது வெற்றியின் ஆரம்ப காலத்தில் ஊடகங்களையும் ஊடகவியலாளர்களையும் அதிகம் அதிகம் புகழ்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அதே ஊடகங்கள் தற்போதைய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக மாறியுள்ள போது அவற்றை தற்போதைய ஆட்சியாளர்கள் விமர்சிப்பதையும் முடக்க எத்தனிப்பதையும் அவதானிக்க முடிகிறது. இங்கு தான் நாம் அனைவரும் மிக முக்கியமாக கவனம் செலுத்த வேண்டிய விடயமுள்ளது.
நாம் செய்த சில விடயங்களை விமர்சித்த மக்கள் அதனை இந்த ஆட்சியாளர்களிடம் எதிர்பார்க்கவில்லை. ஆனால், இன்றைய ஆட்சியில் எம்மை மக்கள் எதற்காக விமர்சித்து புறந்தள்ளினார்களோ அதனை விட பல மடங்கு விமர்சன வேலைகளை செய்து கொண்டிருக்கின்றார்கள். ஊழல் வாதிகளை தங்களோடு வைத்துக் கொண்டு உறவாடிக்கொண்டிருக்கின்றனர் தற்போதைய ஆட்சியாளர்கள்.
அன்று சமூக வலைத்தளங்கள் எம்மை நோக்கி எழுப்பிய வினாக்களை இன்று இந்த ஆட்சியாளர்களிடம் கேட்கும் போது பதில் அளிக்க முடியாது தவிக்கின்றனர். அன்று இனித்த சமூக வலைத்தளங்கள் இன்று கசக்கின்றதென்றால் அது யாருடைய தவறு என்பதை மக்கள் இலகுவாக அறிந்துகொள்ள முடியும். இதன் மூலம் இன்று இவ்வரசின் மதிப்பானது மக்களிடத்தில் பூச்சிய நிலைக்கு சென்றுவிட்டது என்பது புலப்படுகின்றது.
மக்களும் பல விடயங்களில் எம்மை நோக்கி வருகின்ற வீதங்களில் திடீர் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த மே தின கூட்டத்தில் நாம் எதிர்பார்க்காத அளவு மக்கள் ஒன்று கூடியிருந்தனர். இலங்கை மக்கள் எம்மோடு ஒன்றிணைவதை சமூக வலைத்தளங்களை விமர்சிப்பதனாலோ அல்லது அவற்றை முடக்குவதனாலோ ஒரு போதும் தடைசெய்ய முடியாது என்ற செய்தியை ஜனாதிபதி மைத்திரிக்கு தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குறித்த அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
Post a Comment