மிருகக்காட்சி சாலையை இரவில் திறக்க எதிர்ப்பு, விலங்குகளில் உரிமை மீறல் என குற்றச்சாட்டு
கொழும்பு, தெஹிவளை பகுதியில் அமைந்துள்ள தேசிய மிருக காட்சி சாலையை இரவு நேரத்தில் மக்கள் காட்சிக்காக திறந்து வைப்பதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்தை சுற்றாடல் பாதுகாப்பு ஆர்வலர்கள் கண்டித்துள்ளனர்.
அறிக்கையொன்றை விடுத்துள்ள வன விலங்குகள் பாதுகாப்பு அமைச்சர் காமினி ஜெயவிகரம பெரேரா, செப்டம்பர் மாதம் 9-ஆம் தேதி முதல் மிருக காட்சி சாலையை மக்கள் பார்வைக்காக தினமும் இரவு 7.00 மணி முதல் 10.00 மணிவரை திறந்துவைக்க தீர்மானித்துள்ளதாக அறிவித்திருந்தார்.
இது குறித்து கருத்து தெரிவித்த இலங்கை சுற்றாடல் பாதுகாப்பு குழுவின் தலைவர் ரவீந்திரநாத் தாபரே, இந்த தீர்மானத்தின் மூலம் அரசாங்கம் மிருகங்களின் உரிமைகளை மீறியுள்ளதாக குற்றம்சாட்டினார்.
இரவு நேரத்தில் மக்கள் அதிக அளவில் நடமாடுவதன் முலம் மிருகங்களின் சுதந்திரத்திற்கு இடையூறுகள் ஏற்படும் என அவர் தெரிவித்தார்.
இரவு காலத்தில் பெரும் எண்ணிக்கையான மிருகங்கள் தூங்குவது வழக்கமென்று கூறிய அவர், அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை காரணமாக மிருகங்களின் தூக்கம் பாதிக்கப்பட்டு அவைகளுக்கு சுகாதார ரீதியான பிரச்சனைகள் ஏற்பட சாத்தியம் இருப்பதாக எச்சரித்தார்.
எனவே, மக்களின் நலன் கருதி மாத்திரம் தீர்மானங்கள் எடுப்பதை அனுமதிக்க முடியாதென்று கூறிய ரவீந்திரநாத் தாபரே, அவ்வாறான தீர்மானங்களை எடுக்கும் முன்னர் மிருகங்களின் உரிமைகள் குறித்தும் கவனம் செலுத்துமாறு அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்தார்.
Post a Comment