ஹஜ் விவகார வழக்கு, செப்டெம்பருக்கு ஒத்திவைப்பு
-ARA.Fareel-
ஹஜ் விவகாரம் தொடர்பில் மூன்று ஹஜ் முகவர்களால் அஞ்சல், அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் விவகாரங்கள் அமைச்சர், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் மற்றும் அரச ஹஜ் குழுவினர் என்பவர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கின் விசாரணையை உயர் நீதிமன்றம் நேற்று முன்தினம் எதிர்வரும் செப்டெம்பர் 15 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது.
ஹஜ் ஏற்பாடுகளில் உயர்நீதிமன்றம் 2013 ஆம் ஆண்டு வழங்கிய ஹஜ் வழிமுறைகள் (Guide Lines) மீறப்பட்டுள்ளதாகவும் கோட்டா பகிர்வுகள் புதிய முறையிலன்றி உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள ஹஜ் வழிமுறைகளின்படி பழைய முறையிலே தெரிவு செய்யப்பட்டுள்ள ஹஜ் முகவர்களிடையே பகிரப்படவேண்டுமென உத்தரவிடும் படியும் மூன்று ஹஜ்முகவர்களினால் இவ்வழக்கு தொடரப்பட்டிருந்தது.
கரீம் லங்கா, அம்ஜா டிரவல்ஸ், இக்ராஃ டிரவல்ஸ் ஆகிய மூன்று ஹஜ் முகவர் நிலையங்களினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த இவ்வழக்கின் பிரதிவாதிகளாக முஸ்லிம் விவகாரங்கள் அமைச்சர், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர், அரச ஹஜ் குழு உறுப்பினர்கள் என்போர் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தனர்.
நேற்று முன்தினம் உயர்நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவிருந்த இவ்வழக்கு அன்றைய தினம் உயர் நீதிமன்றில் சைட்டம் பல்கலைக்கழக விவகாரம் தொடர்பான வழக்கு விசாரிக்கப்பட்டதால் நேரமின்மை காரணமாக எதிர்வரும் செப்டெம்பர் 15 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
வாதிகள் தரப்பில் மன்றில் சட்டத்தரணிகள் மனோகர டி சில்வா, அனோஜ பிரேமரத்ன ஆகிய ஜனாதிபதி சட்டத்தரணிகள் ஆஜராகியிருந்தனர். பிரதிவாதிகள் தரப்பில் சட்டமா அதிபர், சட்டத்தரணி சஞ்சீவ உட்பட்ட குழுவினர் ஆஜராகியிருந்தனர்.
Post a Comment