முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை, பொய் சொல்கிறார் ரணில் - சிராஸ் நூர்தீன் கண்டனம்
அளுத்கம - தர்ஹாநகர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டோருக்கும் சொத்து சேதங்களுக்கும் உரிய நட்டஈடுகள் வழங்கப்பட்டு, சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என பாராளுமன்றத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்த கருத்துக்கள் பச்சைப் பொய்யாகும் என மூத்த முஸ்லிம் சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மரிக்கார் என்னுடன் தொடர்புகொண்டு அளுத்கம - தர்ஹாநகர் வன்முறையில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் பற்றிய விபரத்தை கேட்டார். நான் அவருக்கு எழுத்துமூலமாக அதை வழங்கினேன்.
இந்நிலையில் பாராளுமன்றத்தில் 05.07.2017 அன்று உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அளுத்கம - தர்ஹாநகர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டோருக்கும் சொத்து சேதங்களுக்கும் உரிய நட்டஈடுகள் வழங்கப்பட்டு. சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என கூறியுள்ளார். இது முற்றிலும் தவறானது.
கடந்தவாரம் கூட நீதிமன்றுக்கு இந்தவிடயம் வந்தது. சம்பவத்துடன் தொடர்புபட்ட விவகாரத்தை கவனிக்கும் பொலிஸ் அதிகாரிகூட நீதிமன்றுக்கு வரவில்லை. முஸ்லிம் விவகாரத்துடன் தொடர்புடைய வழக்குகள் இழுத்தடிக்கப்படுகின்றன. முஸ்லிம்களுக்கு நீதி வழங்குவதில் தாமதம் நிலவுகிறது.
அளுத்கம - தர்ஹாநகர் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுடைய கடைகள் வீடுகளை, திருத்துவதற்கு மஹிந்த ராஜபக்ஸவின் காலத்தில் ஓரளவு நிவாரணம் வழங்கப்பட்டது. எனினும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு வழங்கப்படவில்லை.
2 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். படுகொலையுண்ட முஸ்லிம் இளைஞர்களின் குடும்பங்கள் இன்றும் கஷ்டத்தில் உள்ளன. பலகோடி சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டது. அவற்றுக்கு நிவாரணமோ நஷ்டஈடோ வழங்கப்படவில்லை. எல்லாவற்றையும்விட இந்த வன்முறையுடன் தொடர்புடைய சூத்திரதாரிகள் கைதுசெய்யப்படவோ அல்லது தண்டிக்கப்படவோ இல்லை.
இதுதான் உண்மையான நிலவரம் ஆகும்.
இதைவிடுத்து பிரதமர் ரணில் நாட்டு மக்களையும், பாராளுமன்றத்தையும், முஸ்லிம்களையும் தவறாக வழிநடத்தியுள்ளார். இதற்காக வெட்கப்பட வேண்டும்.
இதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் குறிப்பிட்டுள்ளார்.
இதுவும் பொய். சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றால் இதுவரை சூத்திரதாரிகளை கைது செய்யாமிலிருப்பது ஏன்..? அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தாமலிருப்பது ஏன், நஷ்டஈடு வழங்கப்பட்ட முஸ்லிம்களின் பெயர் விபரங்கள், அவற்றைப் பெற்றுக்கொண்டவர்களின் விபரங்களை பிரதமர் ரணில் பகிரங்கப்படுத்துவாரா எனவும் சிராஸ் நூர்தீன் சவால் விடுத்தார்,
Post a Comment