உலமா கட்சிக்கு நாமல் ராஜபக்ஷ, சிறு உதவியையாவது செய்திருக்கிறாரா..?
முஸ்லிம் கட்சிகளை நம்பாமல் முஸ்லிம்களுடன் நேரடியாக தொடர்பை ஏற்படுத்தியிருந்தால் கடந்த ஜனாதிபதி தேர்தலில் தாம் தோற்கவேண்டி வந்திருக்காது என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சொல்லியிருப்பது கள நிலவரம் மற்றும் யதார்த்ததை அறியாத வார்த்தையாகும் என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
கடந்த ஜனாதிபதி காலத்தில் முஸ்லிம் கட்சிகளுக்குரிய வசதிகளை செய்து கொடுத்தும் கடைசி நேரத்தில் முஸ்லிம் கட்சிகள் கைவிரித்து விட்டன என நாமல் ராஜபக்ஷ கூறியுள்ளமை தவறானது. உண்மையில் கட்சிகளுக்கு முன்பாகவே முஸ்லிம் மக்கள் கட்சி மாறிவிட்டார்கள் என்பதே உண்மையாகும். இதற்கான காரணம் என்ன, ஏற்பட்ட தவறுகள் என்ன என்பது பற்றி தற்போது மஹிந்த அணியினர் ஆராய்வது மிகவும் ஆரோக்கியமான ஒன்றாகும். கடந்த கால தவறுகளை புரிந்து கொள்ளும் போது எதிர்காலம் சிறக்க வாய்ப்பு உள்ளது.
உண்மையில் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி முஸ்லிம்களை பொறுத்தவரை பொற்காலம் எனும் மிகச்சிறந்த ஆட்சி என்பதை அறிவுள்ளவர்கள் மறுக்க முடியாது. ஆனாலும் மஹிந்த அரசின் வீழ்ச்சிக்கு பல காரணங்கள் உள்ளன. அவற்றை மஹிந்த தரப்பினர் இன்னமும் புரியாமல் இருப்பதுதான் கவலையான விடயமாகும்.
முதலில் மஹிந்த அணியினர் செய்த மிகப்பெரிய தவறு தம்மை அனைத்து தேர்தல்களிலும் எதிர்த்த ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரசை நம்பி ஆட்சியில் இணைத்துக்கொண்டமையாகும்இக்கட்சி அரசில் பல பதவிகளை பெற்று சொகுசுகளை அனுபவித்துக்கொண்டு தாம் ஆளுந்தரப்பில் எதிர்க்கட்சியாக இருக்கிறோம் என முஸ்லிம் சமூகத்திடம் சொல்லி மஹிந்தவினால் முஸ்லிம் சமூகம் எதையும் பெற முடியாது என காட்டிக்கொண்டிருந்தது. மு. காவின் தலைவர்கள் அனைத்தையும் அனுபவிக்க பொது மக்களை பரிதவிக்க விட்டதன் காரணமாக மஹிந்த முஸ்லிம்களை ஓரங்கட்டுவதாகவே முஸ்லிம் பொது மக்கள் நினைக்குமளவு முஸ்லிம் காங்கிரஸ் பொய் பிரசாரங்களை மேற்கொண்டது. இவற்றை உலமா கட்சி மஹிந்தவிடம் சுட்டிக்காட்டிய போதும் கருத்தில் எடுபடவில்லை. அதனால் எப்போது தேர்தல்வரும் மஹிந்தவை எப்போது மாற்றலாம் என்ற எண்ணம் முஸ்லிம்களிடம் ஏற்பட்டது.
அடுத்ததாக 2005ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் தொடக்கம் மஹிந்தவுக்கு ஆதரவாக மிக கடுமையாக உழைத்த உலமா கட்சியை வளர்த்தெடுப்பதற்காக மஹிந்த அரசு எத்தகைய முனைப்பையும் காட்டவில்லை. குறிப்பாக முஸ்லிம் காங்கிரசின் கோட்டையான கல்முனையில் உலமா கட்சி களமிறங்கி மஹிந்தவின் வெற்றிக்காக 2005 முதல் பாடுபட்டது. பாரிய அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் பிரசாரத்தை முன்னெடுத்த உலமா கட்சிக்கும் அதன் ஆதரவாளர்களுக்கும் எத்தகைய உதவிகளையும் மஹிந்த அரசு செய்யவில்லை.
அத்துடன் உலமா கட்சி நாட்டின் மௌலவிமாரின் தலைமையிலான கட்சியாகும் என்பதால் அதனை வளர்த்தெடுப்பதன் மூலம் உலமாக்களை அரசியல் மயப்படுத்தி மஹிந்தவுக்கு ஆதரவான பீரங்கிகளாக மௌலவிமாரை ஆக்க முடியும் என பல தடவை நாம் முன்னாள் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியும் கணக்கில் எடுக்காமை மிகப்பெரிய தவறாகும். இந்த நாட்டின் வரலாற்றில் ஒரு முஸ்லிம் கட்சி முன்னூறுக்கு மேற்பட்ட மௌலவிமாரை அலரி மாளிகைக்கு அழைத்துச்சென்று ஜனாதிபதி வேற்பாளருக்கு ஆதரவாக கூட்டம் நடத்தியது என்றால் அது உலமா கட்சி மட்டுமே 2005ல் சாதித்து காட்டியது. இத்தகைய கட்சியை பலப்படுத்த உதவி செய்யாமை பெரும் தவறாகும்.
மற்றுமொரு தவறுதான் எந்தக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அந்தப்பக்கம் பாயும் வழக்கம் கொண்ட தென் பகுதியின் தனிப்பட்ட முஸ்லிம்கள் சிலருக்கு மஹிந்த தரப்பு முக்கியத்துவம் வழங்கினர். அவர்கள் மஹிந்த மூலம் தமது தனிப்பட்ட நன்மைகளை அடைவதிலும் தாம் மஹிந்தவுக்கு ஆதரவு என்று அவரிடம் காட்டிக்கொள்பவர்களாகவும், மஹிந்தவுக்கு புரியாணி கொடுப்பவர்களாகவும் இருந்தார்களே தவிர மஹிந்தவின் நலவுகள் பற்றி ஒரு வார்த்தையேனும் பகிரங்கமாக பேசாதவர்களாக இருந்தனர். அத்துடன் இத்தகையவர்கள் கிழக்கு முஸ்லிம்களை அடிப்படையாகக்கொண்ட முஸ்லிம் கட்சிகள் மஹிந்தவிடம் நெருங்கவிடாமல் பிரதேச வாதம் பேசி அவர்களை மஹிந்தவை விட்டும் ஓரங்கட்டினர் என்ற உண்மையை இனியாவது நாமல் ராஜபக்ஷ போன்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இப்படியான தவறு மஹிந்தவின் ஆட்சிக்காலத்திலும் அதன் பின்னரும் தொடர்கின்றமை மிகப்பெரிய தவறாகும்.
இறுதி தேர்தலின் போது அனைத்து முஸ்லிம்களும் மஹிந்தவை விட்டு விட்டு ஓடிய போது, பொது பல சேனாவை மஹிந்த கட்டுப்படுத்தாமை காரணமாக மஹிந்தவுடன் முரண் பட்டு நின்ற உலமா கட்சி, நல்லாட்சிக்காரர்களை விட மஹிந்த மேல் எனக்கூறி மஹிந்தவுக்கு ஆதரவாக மீண்டும் களம் இறங்கியது மட்டுமன்றி தேர்தல் தோல்வியின் பின்னரும் தனியாக நின்று மஹிந்தவுக்கு ஆதரவாக முஸ்லிம் சமூகத்தில் மீண்டும் மஹிந்த ஆதரவு களத்தை உருவாக்கிய ஒரே கட்சியாக இருந்தும் அக்கட்சியை வளர்க்க மஹிந்த அணியினர் ஒரு சிறு உதவியையும் வழங்காததையும் இங்கு நாம் சுட்டிக்காட்ட வேண்டும்.
பயங்கரவாதத்தை தோற்கடித்து முஸ்லிம்களுக்கு விடுதலையை பெற்றுக்கொடுத்த மாவீரர் மஹிந்த என்பதற்காக உலமா கட்சி மஹிந்தவின் தோல்வியின் பின்னரும் அவருக்கு தோள் கொடுத்த போது மஹிந்த உலமா கட்சிக்கு பணம் கொடுத்ததால்த்தான் அக்கட்சி மஹிந்தவுக்கு ஆதரவாக பேசுகிறது என்ற பல குற்றச்சாட்டுக்கள், அவமானங்களுக்கு அக்கட்சி முகம் கொடுத்தது. ஆனாலும் உலமா கட்சியை வளர்த்தெடுக்க மஹிந்த தரப்பு முனையவில்லை.
இப்போது முஸ்லிம் கட்சிகள் தமக்கு தேவையில்லை என கூறும் நாமல் ராஜபக்ஷ போன்றோர் மஹிந்தவுக்காக பாடுபட்டு மீண்டும் ஆதரவு தளத்தை ஏற்படுத்திய உலமா கட்சிக்கு ஒரு சிறு உதவியையாவது நன்றிக்கடனாக செய்திருக்கிறாரா என கேட்கிறோம்.
ஆகவே மஹிந்தவின் தோல்விக்கு முஸ்லிம் கட்சிகளின் மீது மட்டும் நாமல் ராஜபக்ஷ பழி போடுவதை விடுத்து தமது தரப்பின் தவறுகளே அதிகம் என்பதை உணர்ந்து அவற்றை திருத்திக்கொள்ள முனைய வேண்டும். அத்துடன் இனியாவது மஹிந்தவுக்கு விசுவாசமுள்ள முஸ்லிம் கட்சிகளுக்கு சகல வசதிகளையும் ஏற்படுத்தி வளர்த்தெடுக்க முனைய வேண்டும். இல்லாவிட்டால் முஸ்லிம் காங்கிரஸ் போன்ற கட்சிகள் மிக இலகுவாக முஸ்லிம்களை தேர்தல் நேரத்தில் ஏமாற்றி தம் பக்கம் இழுத்து விடுவார்கள் என்ற யதார்தத்தை மஹிந்த அணியினர் புரிந்து கொள்ள வேண்டும்.
Post a Comment