மகாநாயக்கர்களிடம் சரணடைந்தார் மைத்திரி - பேனை, பேப்பருடன் குறிப்பும் எடுத்தார்..!
ஒற்றையாட்சித் தன்மைக்கோ, பௌத்த மதத்துக்கான முன்னுரிமைக்கோ பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் எந்தவொரு அரசியலமைப்பு மறுசீரமைப்பும் மேற்கொள்ளப்படாது. மகாசங்கத்துடன் கலந்துரையாடப்பட்டே புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் என்று மகாநாயக்க தேரர்களிடம், மைத்திரிபால சிறிசேன உறுதி அளித்துள்ளார்.
கண்டியில் உள்ள அதிபர் செயலகத்தில் நேற்று மாலை நடந்த சந்திப்பின் போதே, மகாநாயக்க தேரர்களிடம், சிறிலங்கா அதிபர் இந்த வாக்குறுதியை அளித்துள்ளார்.
இன்னமும் புதிய அரசியலமைப்பு வரைவு இடம்பெறவில்லை. புதிய அரசியலமைப்பு வரைவு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர், மகாநாயக்க தேரர்களிடமும், ஏனைய மதத் தலைவர்களிடமும் கையளிக்கப்படும்.
புதிய அரசியலமைப்பு ஒன்று வரையப்படும் போது, மகாசங்கம் மற்றும் ஏனைய பங்காளர்களுடன் கலந்துரையாடப்பட்டே அது மேற்கொள்ளப்படும் என்றும் சிறிலங்கா அதிபர் வாக்குறுதி அளித்திருப்பதாக, வண. ஓமல்பே நாயக்க தேரர் தெரிவித்தார்.
“நான்கு மணித்தியாலங்கள் நடந்த இந்தச் சந்திப்பு பயனுள்ளதாக இருந்தது. முக்கியமாக 7 விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
சைட்டம் மருத்துவக் கல்லூரி விவகாரம், புதிய அரசியலமைப்பு, காணாமல் ஆக்கப்படுதலில் இருந்து பாதுகாப்பு அளிப்பது குறித்த அனைத்துலக பிரகடன சட்டமூலம், வடக்கு கிழக்கில் புனித இடங்கள் அழிக்கப்படுதல், சில இடங்களில் பாதுகாக்கப்பட்ட காடுகள் அழிக்கப்படுதல், அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் முரண்பட்ட கருத்துக்களை வெளியிடுதல் போன்ற விடயங்கள் குறித்து முக்கியமாக கலந்துரையாடப்பட்டது.
முக்கியமான விவகாரங்களில், மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்வதற்கான ஆணைக் குழுவொன்றை நியமிக்க வேண்டும் என்று சிறிலங்கா அதிபரிடம் பௌத்த பீடாதிபதிகள் கோரிக்கை விடுத்தனர்.
அந்தக் கோரிக்கைக்கு சிறிலங்கா அதிபர் சாதகமான பதிலை அளித்துள்ளார். இதற்காக உண்மை கண்டறியும் குழு நியமிக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
மூன்று பீடங்களினதும் மகாநாயக்கர்கள் அண்மையில் வெளியிட்ட கூட்டறிக்கை தொடர்பாகவும் ஆராயப்பட்டது” என்றும் அவர் தெரிவித்தார்.
அஸ்கிரிய, மல்வத்தை, ராமன்ன பீடங்களின் மகாநாயக்கர்கள், மற்றும் 22 பௌத்த பிக்குகள் இந்தச் சந்திப்பில் பங்கேற்றனர்.
சிறிலங்கா அதிபருடன் அமைச்சர் விஜேதாச ராஜபக்சவும், மத்திய மாகாண முதலமைச்சர் மற்றும் ஆளுனரும் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.
இந்தச் சந்திப்பின் போது, மகாசங்கத்தினரால் சிறிலங்கா அதிபரிடம் பல்வேறு கடிதங்கள் கையளிக்கப்பட்டன.
புதிய அரசியலமைப்பு தற்போது தேவையில்லை என்றும், தேர்தல் மறுசீரமைப்பை மேற்கொண்டால் மாத்திரம் போதும் என்றும் அஸ்கிரிய பீடத்தின் சார்பில் கடிதம் ஒன்று சிறிலங்கா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இதில் பங்கேற்ற மைத்திரிபாலவின் கையில் ஒரு பேனையும், குறிப்பெடுப்பதற்காக ஒரு பேப்பரும் இருந்ததையும் அவதானிக்க முடிந்தது. வழமையாகவே முக்கிய பிரமுகர்கள் சந்திப்புகளின் போது அவர்களின் செயலாளர்களே இவ்வாறான குறிப்புகளை எடுப்பர் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment