Header Ads



சிறிலங்கா கடற்படையிடம், கையளிக்கப்படுகிறது பாரிய ஆழ்கடல் ரோந்துக் கப்பல்

இந்தியாவின் கோவா கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்ட ஆழ்கடல் ரோந்துக் கப்பல் வரும் 22ஆம் நாள் சிறிலங்கா கடற்படையிடம் கையளிக்கப்படவுள்ளது.

சிறிலங்கா கடற்படைக்கு மிகப்பெரிய இரண்டு ஆழ்கடல் ரோந்துக் கப்பல்களை 1000 கோடி ரூபா செலவில் கட்டுவதற்கான உடன்பாடு நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் கையெழுத்திடப்பட்டது.

இதற்கமைய கோவா கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்ட முதலாவது கப்பல் ஜூலை 22ஆம் நாள்  சிறிலங்கா கடற்படையிடம் அதிகாரபூர்வமாக கையளிக்கப்படவுள்ளது.

105 மீற்றர் நீளமான- 2400 எடை கொண்ட இந்தப் போர்க்கப்பல், சிறிலங்கா கடற்படையினால் வரும் ஓகஸ்ட் 2ஆம் நாள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

‘சிறிலங்கா கடற்படையினால் பயன்படுத்தப்படும் மிகப் பெரிய போர்க்கப்பலாக இது இருக்கும். இந்திய கப்பல் கட்டும் தளத்தினால் ஏற்றுமதி செய்யப்படும் மிகப் பெரிய போர்க்கப்பலாகவும் இது இருக்கும்.  இரண்டு நாடுகளுக்கும் இடையிலான கடற்படை உறவுகளை இது மேலும் ஆழமாக்கும்’ என்று றியர் அட்மிரல் சேகர் மிட்டல் தெரிவித்தார்.

திட்டமிடப்பட்டதை விட மூன்று மாதங்கள் முன்னதாகவே, இந்தக் கப்பல் சிறிலங்கா கடற்படையிடம் கையளிக்கப்படவுள்ளது.

இரண்டாவது கப்பல் 2018 பெப்ரவரியில் – திட்டமிடப்பட்டதற்கு 3 மாதங்கள் முன்கூட்டியே ஒப்படைக்கப்படும்.

இந்த ஆழ்கடல் ரோந்துக் கப்பல்கள், கப்பல்களுக்கு ஆதரவளிக்கும் நடவடிக்கைகள், கடல்சார் கண்காணிப்பு, ஆழ்கடல் நிலைகளின் பாதுகாப்பு, மற்றும் அதிக பெறுமானம் கொண்ட கப்பல்களின் பாதுகாப்பு என பல்வேறு பங்குகளை ஆற்றக் கூடியவை.

25 கடல் மைல் வேகத்தில் பயணிக்கக் கூடிய இந்தக் கப்பல்களில், ஒரு உலங்குவானூர்தி தரித்திருப்பதற்கான வசதிகளும் உள்ளன.

No comments

Powered by Blogger.