கணவனை சிறையிலடைத்து, மகனின் எதிர்காலத்தை அழித்த ஜனாதிபதி - சீறுகிறார் தமிழ் பெண்
“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா, தனது ஆட்சியை நல்லாட்சி என கூறிக்கொண்டு, என் கணவனை பயங்கரவாதி என அடையாளப்படுத்தி சிறையிலடைத்தது மட்டுமல்லாமல், என் 15 மகனை மேசன் தொழிலாளியாக்கி ஒரு பாடசாலை சிறுவனின் எதிர்காலத்தையே அழித்துவிட்டார். உண்மையில் இங்கே நடப்பது நல்லாட்சி என்றால் என் கணவனை விடுதலை செய்யுங்கள். எனது மகனின் எதிர்காலத்தை பாதுகாத்து கொடுங்கள்” என, கடந்த 2013ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு விசாரணைகள் இன்றி தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஜோசப் செபஸ்தியன் என்ற தமிழ் அரசியல் கைதியின் மனைவி ஜோசப் செபஸ்தியன் றீட்டா, கண்ணீர்மல்க உருக்கமான கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்தித்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
“2013ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 11ஆம் திகதி வவுனியா மாவட்டத்தில் வைத்து பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸார் எனது கணவனை கைது செய்தனர். அதன் பின்னர், கடந்த 4 வருடங்களாக எந்தவொரு விசாரணையும் இல்லாமல், எனது கணவன் சிறையிலடைக்கப்பட்டிருக்கின்றார். எதற்காக கைது செய்தீர்கள்? என் கணவன் மீது என்ன குற்றச்சாட்டு சுமத்தியுள்ளீர்கள்? என கேட்டதற்கு நல்லாட்சி அரசாங்கம் ஒரு பதிலும் வழங்கவில்லை.
“எனது கணவனை பயங்கரவாதியாக அடையாளப்படுத்தி சிறையிலடைத்த இந்த அரசாங்கம் எனது 15 வயது மகனை மேசன் தொழிலாளியாக மாற்றி குடும்ப பொறுப்பை ஒரு 15 வயது சிறுவன் மீது சுமத்தியிருக்கின்றது. இதுவா நல்லாட்சி? எனது ஆட்சி நல்லாட்சி என கூறிய ஜனாதிபதி, எனது கணவனை பயங்கரவாதி ஆக்கி சிறையிலடைத்திருக்கிறார். தனது நல்லாட்சி பாடசாலை சிறுவர்களுக்கு சிறப்பான காலம் என சொன்னவர், ஒரு 15 வயது பாடசாலை மாணவனை மேசன் தொழிலாளி ஆக்கியிருக்கின்றார். பின்னர் எப்படி இரு நல்லாட்சி ஆகும்?
“எனது கணவனை விடுதலை செய்யுங்கள் என கேட்டு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் தமிழ் அரசியல்வாதிகள் என அனைவருக்கும் கடிதம் எழுதி களைத்துவிட்டேன். பலர் பதிலே தருவதில்லை. பலர் பதில் எழுதுகிறார்கள். தண்டணை காலம் முடிந்த பிறகு விடுதலை செய்வார்களாம். குற்றமே என்ன என்று தெரியாத இந்த அரசாங்கம் எனது கணவருக்கு தண்டனை எப்படி வழங்கும்?
“எனவே, எனது கணவனை விடுதலை செய்து என் பிள்ளையின் எதிர்காலத்தை பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லையேல் அரசியல்வாதிகள் அரசியலுக்காக நடத்தும் உண்ணாவிரதம் போல அல்லாமல் சாகும் வரையில் உண்ணாவிரதம் இருக்கப்போகிறேன்” என கண்ணீர் மல்க கூறினார்.
Post a Comment