"வடக்கில் உள்ள தீவிரப்போக்கு அரசியல்வாதிகளே, விகாரையின் அபிவிருத்திக்குத் தடை"
வடக்கில் உள்ள சில தீவிரப் போக்குடைய அரசியல்வாதிகளே நாவற்குழியில் உள்ள சிறீ சமிதி சுமண விகாரையின் அபிவிருத்திக்குத் தடையாக இருப்பதாக, அதன் விகாராதிபதியான ஹன்வெல்ல ரத்னசிறி தேரர் குற்றம்சாட்டியுள்ளார்.
கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர்,
‘இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த நாவற்குழி சிறீ சமிதி சுமண விகாரையின் கட்டுமானப் பணிகள், சாவகச்சேரி நீதிமன்றம் ஜூலை 7ஆம் நாள் அளித்த தீர்ப்பை அடுத்து, மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தாதுகோபம் கட்டுவதற்கு சாவகச்சேரி பிரதேச சபை தடைவிதித்திருந்தது.
தாதுகோபம் கட்டுவதற்கு எந்த தடையையும் ஏற்படுத்தாமல், அனுமதி அளிக்குமாறு சாவகச்சேரி பிரதேச சபைக்கு சாவகச்சேரி நீதிமன்றம், உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்றத் தீர்ப்பை அடுத்து, கட்டுமானப்பணிகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
60 அடி உயரத்தில் 10 இலட்சம் ரூபா செலவில் இந்த தாதுகோபம் அமைக்கப்படுகிறது.
வடக்கில் உள்ள சில தீவிரப் போக்குடைய அரசியல்வாதிகளே நாவற்குழியில் உள்ள சிறீ சமிதி சுமண விகாரையின் அபிவிருத்திக்குத் தடையாக இருக்கின்றனர்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment