சவூதியில் குட்டைப் பாவாடை பெண், நிரபராதி என விடுவிப்பு
(தினகரன் பத்திரிகை)
வீடியோ ஒன்றில், குட்டைப் பாவாடையுடன் அரைகுறையாக, ஆடை அணிந்து சென்ற சவூதி பெண், எவ்வித வழக்கும் பதிவு செய்யப்படாமல் விடுவிக்கப்பட்டுள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் எழுந்த சர்ச்சையை அடுத்து, குறித்த பெண் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டார்.
இஸ்லாமிய முறைப்படி உடை அணியும் முறை குறித்த கடுமையான விதிகளை மீறியதற்கு அவரை தண்டிக்க வேண்டும் என்று சிலர் கோரிக்கை விடுத்திருந்தனர்.
ஆனால், அரசு வழக்கறிஞர் இந்த வழக்கை முடித்துவிட்டதாக, அந்நாட்டின் தகவல் தொடர்பாடல் அமைச்சு தெரிவித்திருக்கிறது.
குறித்த பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், தன்னுடைய தலையை மூடாமல், குட்டைப் பாவாடை அணிந்து குறிப்பிட்ட இடத்தில் நடந்து சென்றதை அப்பெண் ஒத்துக்கொண்டுள்ளார்.
அத்துடன் யாரும் இல்லாத வேளையிலேயே குறித்த வீடியோ எடுக்கபட்டுள்ளமை மற்றும் அவருக்கு தெரியாமல் அது இணையத்தில் பதிவு செய்யப்பட்டமை உள்ளிட்ட காரணங்களால் அவர் இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இஸ்லாமிய முறைப்படி பொது இடங்களில் பெண்கள் ஒழுக்கமான முறையில் தங்களது உடலை மறைக்க வேண்டும் எனும் சட்டம் இருக்கின்ற போதிலும், அந்நிய ஆண்கள் இல்லாத இடத்தில் அப்பெண் எவ்வகையான ஆடையையும் அணியலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
"மொடல் குலூத்" எனும் இணைய பயன்பாட்டாளரால், "ஸ்நப்சட்" சமூக வலைத்தளத்தில் இந்த வீடியோ முதலில் பதிவிடப்பட்டதோடு, அது பெரும் சர்ச்சையையும், ஆதரவான மற்றும் எதிர்பான விமர்சனங்களையும் ஏற்படுத்தியது.
சிலர் இப்பெண்ணின் தைரியத்தை புகழ்ந்து கருத்து தெரிவித்து, அவர் விரும்பியதை அணிவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்று அவருக்கு ஆதரவு தெரிவித்தும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆயினும் அந்நிய ஆண்களுக்கு முன், இவ்வாறு உடை அணிவதை தான் விரும்பவில்லை என அப்பெண் தெரிவித்திருந்தாக தெரிவிக்கப்படுகின்றது.
Post a Comment