நாட்டுக்கு சேவை செய்யவிருந்த எமது பிள்ளைகளை, பணத்துக்காக கடத்தினர் - கண்ணீர் விட்டழுத உறவினர்கள்
படித்து நாட்டுக்கு சேவை செய்யவிருந்த எமது பிள்ளைகளை பணத்துக்காக கடத்திச் சென்றனர். எம்மிடம் கோடிக் கணக்கில் கப்பம் கோரினர். இதுவரை அவர்கள் தொடர்பில் எந்த தகவல்களும் இல்லை. கடற்படையினரே இந்த கடத்தல்களுடன் தொடர்புடையவர்கள் என்பதை குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணைகள் ஊடாகவே நாம் அறிந்தோம்.
தற்போது சில அரசியல்வாதிகள் எமது பிள்ளைகளை பயங்கரவாதிகளாக சித்திரிக்க முற்படுகின்றனர். 8 வருடங்களாக நாம் எமது பிள்ளைகளை தேடுகின்றோம். அவர்கள் எங்கே? தயவு செய்து இந்த விடயத்தில் அரசியல் சாயம் பூசாது, எமக்கான நியாயத்தைப் பெற்றுத்தாருங்கள் என கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் கடத்தப்பட்ட ஐந்து மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரின் உறவினர்கள் நேற்று கண்ணீர் விட்டழுது வேண்டுகோள் விடுத்தனர்.
கொழும்பு – நிப்பொன் ஹோட்டலில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பை நடாத்தியே அவர்கள் அரசாங்கத்திடம் இந்த வேண்டுகோளை விடுத்ததுடன் குற்றப் புலனயவுப் பிரிவினருக்கு விசாரணைகளை முன்னெடுத்துச் செல்ல அனுமதிக்குமாறும் அவர்களுக்கு இடையூறு செய்யும் வகையிலான அரசியல் தலையீடுகளை செய்ய வேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுத்தனர்.
2008 ஆம் ஆண்டு கொழும்பில் வைத்து கடத்தப்பட்ட 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் விடுதலை புலிகள் என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச ஊடகங்களிடம் தெரிவித்த கருத்துக்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக காணாமல் ஆக்கப்பட்டோரின் பெற்றோர்கள் இந்த ஊடகவியலாளர் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தனர். இதில் கலந்துகொண்டி பேசும் போதே கண்ணீருடன் குறித்த உறவுகள் மேற்படி விடயத்தை ஊடக்ங்களிஉடம் வெளிப்படுத்தினர்.
காணாமல் ஆக்கப்பட்ட ரஜீவ் நாகநாதனின் தாய் சரோஜினி நாகநாதன் தெரிவிக்கையில், 2008 செப்டம்பர் மாதம் 17 ஆம் திகதி எனது மகன் கடத்தப்பட்டார். எனக்கு இருந்தது ஒரே ஒரு மகன். உயர் கல்விக்காக வெளிநாடு செல்லவிருந்த நிலையில் அவன் கடத்தப்பட்டான். திலகேஸ்வரன், டிலான் ஆகிய தனது இரு நண்பர்களுடன் அவன் வீட்டிலிருந்து காரில் சென்ற போதே தெஹிவளையில் வைத்து கடத்தப்பட்டுள்ளான்.
கடற்படையினரால் அவன் கடத்தப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த போது தொலைபேசி ஊடாக எங்களுடன் கதைத்தும் உள்ளார்.
அவர்கள் பேசும் தொலைபேசி இலக்கத்துக்கு நாமே ரீலோட்டும் செய்துள்ளோம். மகனை விடுவிக்க என்னிடம் ஒரு கோடி ரூப கப்பம் கோரப்பட்டது. நான் 75 இலட்சம் ரூபாவுடன் நாரம்மலைக்கு செல்ல முற்பட்ட போது அப்போதைய அமைச்சர் ஒருவரின் அறிவுறுத்தலுக்கு அமைய நான் அங்கு செல்லவில்லை.
குறித்த அமைச்சர் கடற்படை தளபதி கரன்னா கொடவுடன் பேசி, எனது மகனை விடுவிக்க நடவடிக்கை எடுத்திருந்தார். எனினும் இன்று வரை எனது மகன் விடுவிக்கப்படவில்லை என்றார்.
(எம்.எப்.எம்.பஸீர்)
Post a Comment