"தலைவர் பதவியை ராஜினாமா செய்வது குறித்து, இன்னும் யோசிக்கவில்லை"
இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்வது குறித்து இன்னும் யோசிக்கவில்லை எனவும் அதை பற்றி யோசிக்க கால அவகாசம் தேவை எனவும் மேத்யூஸ் கூறியுள்ளார்.
இலங்கையில் சுற்றுபயணம் செய்து விளையாடிய ஜிம்பாப்வே அணி 3-2 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை கைப்பற்றி சாதனை படைத்தது.
ஒருநாள் கிரிக்கெட் அணிகள் பட்டியலில் 11வது இடத்தில் இருக்கும் கத்துகுட்டி அணியான ஜிம்பாப்வேயிடம் இலங்கை தொடரை இழந்தது பெரிய விடயமாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், தோல்விக்கு பின்னர் பேட்டியளித்த இலங்கை அணி தலைவர் மேத்யூஸ், இந்த தோல்வியை ஜீரணிப்பது கடினமாக உள்ளது என கூறியுள்ளார்.
நேற்றைய போட்டியில் டாஸ் போட்டதிலிருந்து பின்னர் நடந்த எல்லா விடயங்களும் தங்கள் அணிக்கு எதிராகவே அமைந்ததாகவும், ஆனாலும் தோல்விக்கு சாக்கு கூற விரும்பவில்லை எனவும் மேத்யூஸ் கூறியுள்ளார்.
இந்த தொடர் முழுவதும் இலங்கை அணியின் பேட்டிங் சிறப்பாக இருந்ததாகவும், ஆனால் நேற்றைய முக்கிய போட்டியில் பேட்ஸ்மேன்கள் சரியாக விளையாடாததால் 203 ஓட்டங்களே எடுக்க முடிந்தது என மேத்யூஸ் கூறியுள்ளார்.
கத்துகுட்டி அணியுடன் தோல்வியடைந்ததால் தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்வாரா என மேத்யூஸிடம் கேள்வி கேட்கப் பட்டது.
அதற்கு பதிலளித்த மேத்யூஸ், இது குறித்து இன்னும் யோசிக்கவில்லை எனவும் அதை பற்றி யோசிக்க தனக்கு கால அவகாசம் தேவை எனவும் கூறியுள்ளார்.
இது சம்மந்தமாக தெரிவு குழுவினருடன் பேச வேண்டும் எனவும் மேத்யூஸ் தெரிவித்தார்.
2019ல் நடக்கவிருக்கும் உலக கிண்ண கிரிக்கெட் தொடர் வரை, தான் இலங்கை தலைவராக இருப்பேன் என உறுதியாக சொல்ல முடியாது என மேத்யூஸ் ஏற்கனவே கூறியது குறிப்பிடத்தக்கது.
Post a Comment