சிங்கள மக்களைப் பாதுகாக்கும் வகையில்தான், அரசமைப்பு தயாரிக்கப்படும் - கபீர் ஹாசீம்
புதிய அரசமைப்பு நாட்டுக்கு மிகவும் அவசியமாகும், "பெரும்பான்மைச் சிங்கள மக்களுக்கும் நாட்டுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் புதிய அரசமைப்பு தயாரிக்கப்பட மாட்டாது. சிங்கள மக்களைப் பாதுகாக்கும் வகையில்தான் அரசமைப்பு தயாரிக்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான கபீர் ஹாசீம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
இன்னும் புதிய அரசமைப்பு தயாரிக்கப்படவில்லை. அதில் அடங்கப் போகின்ற விடயங்கள் பற்றி எதுவும் தெரியாமல் பொய்யான தகவல்கள் பரப்பப்படுகின்றன.
குறிப்பாக, பௌத்த மக்களுக்கும் பௌத்த மதத்துக்கும் நாட்டுக்கும் ஆபத்து ஏற்படும் வகையில்தான் அரசமைப்பு தயாரிக்கப்படவுள்ளது என்று சிலர் கூறித் திரிகின்றனர்.
ஜனாதிபதி ஒரு பௌத்தர். பிரதமரும் ஒரு பௌத்தர். இவர்கள் தங்களது பௌத்த மதத்தை அழிப்பதற்கு முற்படுவார்களா என்று பௌத்த மக்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
பௌத்த மதத்தை சீரழிப்பதால் எமக்கு ஏற்படப் போகும் நன்மை என்ன? இது தொடர்பில் பௌத்த தேரர்களைக்கூட பிழையாக வழிநடத்துவதற்கு முயற்சி செய்கின்றனர்.
பௌத்த மதத்துக்கு இருக்கும் முதன்மை இடம் அப்படியேதான் இருக்கும். அதை மாற்றுவது பற்றி எவரும் கூறவும் இல்லை. பெரும்பான்மை சிங்கள மக்களுக்கும் நாட்டுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் புதிய அரசமைப்பு தயாரிக்கப்பட மாட்டாது.
சிங்கள மக்களைப் பாதுகாக்கும் வகையில்தான் அரசமைப்பு தயாரிக்கப்படும் என்பதை அழுத்தமாகக் கூறிக்கொள்கிறேன். புதிய அரசமைப்பு நாட்டுக்கு மிகவும் அவசியமாகும். நாட்டுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கிலேயே புதிய அரசமைப்பைக் கொண்டு வரவுள்ளோம்.
அப்படிப்பட்ட அரசமைப்பைக் கொண்டு நாம் வீண் குழப்பத்தை ஏற்படுத்துவோமா என்று சற்று எண்ணிப் பார்க்க வேண்டும். குழப்பவாதிகளின் பொய்ப் பிரசாரங்களை மக்கள் நம்பிவிடக் கூடாது.
குறிப்பாக, மத விடயத்தில் கை வைத்து தேரர்களை உசுப்பி விடுவதற்கும் அவர்களை அரசமைப்புக்கு எதிராகத் திருப்பி விடுவதற்கும் சதி செய்யப்படுகின்றது.
ஜனாதிபதி தேரர்களைச் சந்தித்து புதிய அரசமைப்பு பற்றி முழுமையான விளக்கத்தைக் கொடுத்துள்ளார் என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment