முஸ்லிம் இளைஞருக்கு, நீதி மறுக்கப்படுவது ஏன்..?
-ARA.Fareel-
ஒரு நாட்டில் நீதித் துறையும், சட்டத்தை அமுல்படுத்தும் அதிகாரிகளும் சுயாதீனமாக இயங்க வேண்டும். இதுவே ஜனநாயகத்தின் உச்ச நிலையாகும். ஆனால் இன்று எமது நாட்டில் சட்டத்தை அமுல் படுத்தும் பாதுகாப்பு அதிகாரிகள் நேர்மையாக நடந்து கொள்கிறார்களா? நீதி அனைவருக்கும் சமமாக நிலை நாட்டப்படுகிறதா? என்பது தொடர்பில் விமர்சனங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.
அண்மையில் நாட்டில் இடம்பெற்ற நீதியுடன் தொடர்புபட்ட இரு சம்பவங்கள் மக்களிடையே பல சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளன. அவற்றில் ஒன்று கண்டி மாவட்டத்தின் கடுகண்ணாவைப் பொலிஸ் பிரிவைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர் ஒருவர் தனது முகநூலில் புத்தபெருமான் தொடர்பாக பதிவேற்றிய கருத்துகள் தொடர்பான சம்பவமாகும். அடுத்தது பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருடன் தொடர்புபட்ட இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் குர்ஆனையும் அவமதிக்கும் வகையிலான வெறுப்பு பேச்சுகளாகும்.
தந்துரை சம்பவம்
தந்துரை கிராமத்தைச் சேர்ந்த 21 வயது முஸ்லிம் இளைஞர் ஒருவர் புத்தபெருமானை அவமதிக்கும் வகையில் தனது முகநூலில் கருத்துகள் வெளியிட்டதையடுத்து அக்கிராமத்தில் அசம்பாவிதங்கள் ஏற்பட்டன. பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த இளைஞர்கள் முஸ்லிம்களின் 9 வீடுகளை தாக்கி சேதப்படுத்தினார்கள். குறிப்பிட்ட இளைஞன் தனது முகநூல் பதிவில் கருத்துகளை தனது புகைப்படத்துடன் வெளியிட்டதனாலே பெரும்பான்மை சமூகத்தினரால் இளைஞனை அடையாளம் காண முடிந்தது. இச்சம்பவம் கடந்த மே மாதம் 27 ஆம் திகதி மாலை நடைபெற்றது.
மூன்று இளைஞர்கள் கைது
இச்சம்பவம் தொடர்பில் மூன்று இளைஞர்கள் கடுகண்ணாவைப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு கண்டி நீதிவான் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டனர். புத்தரை அவமதித்து தனது முகநூலில் பதிவுகளை பதிவேற்றிய முஸ்லிம் இளைஞரும் முஸ்லிம்களின் வீடுகளைத் தாக்கி சேதப்படுத்திய பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். விளக்கமறியலில் வைக்கப்பட்ட மூன்று இளைஞர்களில் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களும் 14 நாட்களின் பின்பு பிணையில் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால் முஸ்லிம் இளைஞருக்கு பிணை மறுக்கப்பட்டது. அவர் தொடர்ந்தும் பிணையில் வைக்கப்பட்டுள்ளார்.
முஸ்லிம் இளைஞருக்கு பிணை மறுப்பு
புத்தரை அவமதித்து முகநூலில் பதிவுகளை பதிவேற்றிய வழக்கு விசாரணை கடந்த 12 ஆம் திகதி புதன்கிழமை கண்டி நீதிவான் நீதிமன்றத்தில் இடம்பெற்றது. முஸ்லிம் இளைஞரின் சார்பில் ஆஜரான ஆர்.ஆர்.ரி. அமைப்பின் சட்டத்தரணி சைனாஸ் மொஹம்மட் சந்தேக நபரான இளைஞருக்கு பிணை வழங்கப்படவேண்டுமென்று வாதிட்டார். சம்பந்தப்பட்ட இளைஞர் வேறோர் நபருடன் மேற்கொண்ட கருத்தாடல்களுக்கு பதில் வழங்கும் முகமாகவே புத்தபெருமானைப் பற்றிய கருத்துகளை பதிவேற்றம் செய்துள்ளார். புத்தரை அவமதிக்க வேண்டும் அல்லது ஒரு இனக்கலவரத்தை உருவாக்க வேண்டுமென அவர் தனது கருத்தை பதிவேற்றவில்லை.
அதனால் இளைஞருக்கு பிணை வழங்கப்பட வேண்டுமென ஆர்.ஆர்.ரி அமைப்பின் சட்டத்தரணி வாதிட்டார். இளைஞர் தவறான அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டே நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இச்சந்தர்ப்பத்தில் நீதிமன்றில் ஆஜராகியிருந்த கடுகண்ணாவை பொலிஸார் பிணை வழங்குவது தொடர்பில் உயர் அதிகாரியே கருத்து தெரிவிக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டதையடுத்து நீதிவான் பிணை வழங்குவதை மறுத்து எதிர்வரும் 23 ஆம் திகதிக்கு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார். குறிப்பிட்ட இளைஞன் தொடர்ந்து பிணை வழங்கப்படாது கடந்த 45 நாட்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். இளைஞன் புத்தபெருமானைப் பற்றி தன்னையறியாமலே ஒருவருக்கு பதில் வழங்கும் வகையில் முகநூலில் பதிவேற்றிய கருத்துகளுக்காக 45 நாட்களுக்கும் மேலாக மேலும் 14 நாட்கள் விளக்க மறியலில் வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இதேவேளை வருடக்கணக்கில் முஸ்லிம்களைப் பற்றியும் இஸ்லாத்தைப் பற்றியும் புனித குர்ஆனைப் பற்றியும் அவதூறு பேசிவந்த ஞானசாரர் தேரர் பல பிடியாணைகளுக்குப் பின்பு நீதிமன்றில் ஆஜரான போது அவருக்குப் பிணை வழங்கப்பட்டமை தொடர்பில் மக்கள் விசனம் தெரிவிக்கிறார்கள்.
பொலிஸார் நேர்மையாக செயற்படுவார்களா!
தந்துரை இளைஞன் விவகாரத்தில் பொலிஸார் நீதிமன்றுக்கு தயாரித்து வழங்கியுள்ள 'பீ' அறிக்கை மிகவும் கடுமையானதாகவே இருக்க வேண்டும். அதனாலேயே அவருக்கு தொடர்ந்தும் பிணை மறுக்கப்பட்டுள்ளது. முகநூலில் புத்தபெருமானைப் பற்றி தவறான கருத்துகளை அதன் பாரதூரம் தெரியாது அவர் பதிவேற்றி விட்டார். அதற்காக 45 நாட்கள் கடந்தும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ஆனால் இனவாதம் பேசி நாட்டில் பள்ளிவாசல் தாக்குதல்களுக்கும் முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்களின் தீவைப்புக்கும் காரணமாக இருந்த ஞானசார தேரர் பிணையில் விடப்பட்டுள்ளார்.
அல்லாஹ்வைத் தூசித்தவர் அவர். நபிகள் நாயகத்துக்கு சவால் விட்டவர் அவர். குர்ஆனைத் தூற்றியவர் அவர். தூசணம் பேசி முஸ்லிம்களை இழிவுபடுத்தியவர் அவர். அவரது நடவடிக்கைகள் தொடர்பில் பொலிஸார் நீதிமன்றிற்கு முதலில் வழங்கிய 'பீ' அறிக்கை மிகவும் பயங்கரமானது. நாடே பற்றி எரியும் வண்ணம் அதில் குற்றச்சாட்டுகள் இருந்தன என நீதிவானே அதன் பயங்கரம் தொடர்பில் நீதிமன்றில் அறிவித்துள்ளார். இந்த 'பீ' அறிக்கையை பொலிஸார் இடையீட்டு மனு ஒன்றினூடாக மாற்றியமைத்து புதிய விடயங்களைப் புகுத்தி விட்டார்கள்.
ஞானசார தேரருக்கு பிணை பெற்றுக்கொடுப்பதற்கான தந்திரமே இது. எது எவ்வாறாயினும் ஞானசார தேரர் பிணையில் வெளியேறி இன்று சுதந்திரமாக இருக்கிறார். நீதிபதியின் வார்த்தையில் கூறுவதென்றால் 'நாடே பற்றி எரியும் வகையிலான குற்றச்சாட்டுகளே முதலில் அவர் மீது சுமத்தப்பட்டிருந்தன'. ஆனால் இன்று ஓர் முஸ்லிம் இளைஞன் முகநூல் பதிவேற்றத்தில் புத்தபெருமானை அவமதித்தார் என்பதற்காக விளக்கமறியலில் நாட்களைக் கடத்துகிறார். ஏன் இந்த வேறுபாடுகள் காவி உடைக்கு விசேட சலுகையா!
Post a Comment