"கட்டுநாயக்காவில் ஹஜ் பயணிகளுக்கு, அசௌகரியங்களுக்கு இடமளிக்கப்பட மாட்டாது என உறுதி"
இலங்கையிலிருந்து இவ்வருடம் ஹஜ் கடமையை மேற்கொண்டு புறப்பட்டுச் செல்லும் ஹஜ் யாத்திரிகர்களுக்கு தமது பயணத்தின் போதும், இலங்கைக்கு திரும்பி வரும் சந்தர்ப்பத்திலும் விமான நிலையத்தில் எவ்வித அசௌகரியங்களுக்கும் இடமளிக்கப்பட மாட்டாது என கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலைய அதிகாரிகள் உத்தரவாதம் அளித்தனர்.
ஹஜ் யாத்திரிகர்களின் நலன்கருதி வுழூ செய்து கொள்வதற்கும் ஏனைய தேவைகளுக்கும் பிரத்தியேக வசதிகள் செய்து கொடுக்கப்படுமெனவும் உறுதியளிக்கப்பட்டது.
நேற்றுக்காலை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் எம்.ஆர்.எம். மலிக் மற்றும் அரச ஹஜ் குழுவின் தலைவர் கலாநிதி எம்.ரி.சியாத் ஆகியோருக்கும் கட்டுநாயக்க விமான நிலையத்தின் உயரதிகாரிகளுக்கு இடையில் ஹஜ் யாத்திரிகர்களின் நலன்கள் தொடர்பில் விமான நிலையத்தில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலின் போதே விமான நிலைய அதிகாரிகளால் மேற்குறிப்பிட்ட உத்தரவாதங்கள் வழங்கப்பட்டன. முதலாவது ஹஜ் குழு புறப்பட்டுச் செல்லும் ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதியிலிருந்து ஹஜ்ஜாஜிகளின் அசௌகரியங்களைத்
தவிர்ப்பதற்காக தேவையேற்படின் மேலதிக ஊழியர்களும் பணியில் அமர்த்தப்படவுள்ளனர்.
ஹஜ் யாத்திரிகர்கள் விமானத்தில் தம்முடன் எடுத்துச்செல்லும் பிரயாணப் பையில் திரவப்பொருட்கள் கொண்டு செல்வதற்கு அனுமதிக்கப்பட மாட்டாதெனவும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். ஹஜ் பயணிகளை விமான நிலையத்தினுள் வழிகாட்டுவதற்கும் ஊழியர்கள் அமர்த்தப்பட்டுள்ளனர்.
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் எம்.ஆர்.எம்.மலிக் நடைபெற்ற கலந்துரையாடல் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், ‘முன்னைய வருடங்களில் ஹஜ் யாத்திரிகள் விமான நிலையத்தில் எதிர்கொண்ட அசௌகரியங்கள் இவ்வருடம் முற்றாக தவிர்க்கப்படவுள்ளன.
கடந்த காலங்களில் ஹஜ் யாத்திரிகர்கள் விமான நிலையத்தில் எதிர்கொண்ட பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு எட்டப்பட்டுள்ளது’ என்றார்.
Post a Comment