முஸ்லிம்கள் கருத்தடையை ஏற்படுத்தும், உணவுகளை வழங்குவதாக பிரச்சாரம் -அமீன்
முஸ்லிம்கள் நிதானமாகவும் தூரநோக்குடனும் செயற்படுவதன் மூலமே 1200வருடங்களாக எமது மூதாதையர்கள் கட்டிக்காத்த இன சௌஜன்யத்தைப் பேண முடியும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சில் ஆகியவற்றின் தலைவரான என். எம். அமீன் தெரிவித்தார்.
வாரியப்பொல ஜும்ஆப் பள்ளிவாசலில் நாட்டின் தற்போதைய நிலைபற்றி உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும் பேசிய அவர் கூறியதாவது,
அண்மைக்காலமாக சில தீய சக்திகள் முஸ்லிம்களை இலக்காக வைத்து போலி பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர். 1200 வருடங்களுக்கு மேலாக ஒற்றுமையாக வாழ்ந்த பெரும்பான்மைச் சமூகத்துடன் மோதலை ஏற்படுத்தும் இலக்கிலே சில பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. சிங்கள சமூகத்துடன் ஒற்றுமையாக வாழும் முஸ்லிம் சமூகத்தைப் பிரித்து வைக்கும் நோக்கிலே இச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. முஸ்லிம் வர்த்தக நிலையங்களில் பெரும்பான்மைச் சமூகத்தினரிடையே கருத்தடையை ஏற்படுத்தும் நோக்கில் உணவு வகைகள் பரிமாறப்படுவதாக பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றன. விஞ்ஞான ரீதியாக நிரூபிக்க முடியாத குற்றச்சாட்டுகளை முன்வைத்து அப்பாவி மக்களை திசை திருப்ப முற்படுகிறார்கள். இந்த சதிவலையில் சிக்கிவிடாது முஸ்லிம்கள் நிதானமாக நடந்து கொள்ள வேண்டும்.
எமது மூதாதையர்கள் போதிய படிப்பறிவு இல்லாதிருந்த போதும் பெரும்பான்மை மக்களது நம்பிக்கைக்குரியவர்களாக வாழ்ந்து வந்துள்ளனர். 1971 ஆம் ஆண்டு இனக்கலவரத்தின் போது றம்புக்கணையில் முஸ்லிம் வர்த்தகர் ஒருவர் தனது கடையில் பெரும்பான்மை சமூகத்தவர்கள் பாதுகாப்பாக வைத்திருந்த பண முடிச்சுக்களை அங்கிருக்கும் விஹாரையின் அதிபதிக்கு கையளித்துவிட்டு நகரிலிருந்து வெளியேறிய சம்பவம் முஸ்லிம்களது நேர்மைக்கு உதாரணமாக இன்றும் சுட்டிக் காட்டப்படுகின்றது.
இன்று முஸ்லிம் வர்த்தகர்கள் பற்றி பல விமர்சனங்கள் எழுப்பப்படுகின்றன. நேர்மைக்கு மாற்றமாகச் செயற்படுவதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.இலாபத்தை மட்டும் இலக்காகக் கொண்டே செயற்படுவதாகக் கூறுகிறார்கள். இஸ்லாம் நேர்மையான வர்த்தகத்தை ஊக்குவிக்க, நாம் அதற்கு மாற்றமான முறையில் செயற்படுவது விமர்சனத்திற்குள்ளாக்கப்பட்டு ள்ளது.
முஸ்லிம்களுக்கெதிராக கடந்த அரசாங்க காலத்தில் 530க்கு மேற்பட்ட சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. நல்லாட்சி அரசிலும் பல சம்பவங்கள் தொடர்ந்த வண்ணமுள்ளன. சில கடும் போக்கு அமைப்புக்கள் இவற்றுக்குப் பொறுப்பாக இருக்கின்றன. இவ்வாறான சம்பவங்களை மேற்கொண்டு ஆயிரம் வருடத்துக்கு மேலான உறவினைச் சீர் குலைப்பதற்கு சில தீய சக்திகள் முயலுகின்றனர். ஆனால் இந்த செயற்பாடுகளை பெரும்பான்மையினர் ஆதரிக்கவில்லை. இன்றும் எங்களது பாவனையாளர்களாக அவர்களே இருக்கிறார்கள் என்பதனை நாம் மறந்து விடக்கூடாது.
பெரும்பான்மை மக்கள் வாழும் இந்த நகரில் எமது பள்ளிவாசல் மற்றும் செயற்பாடுகள் சிறப்பாக இயங்குகின்றன. நாம் இயன்றளவில் மாற்று சமூகத்தில் எமக்காகப் பேசக்கூடிய வகையில் உறவுகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். பிரதேசத்திலுள்ள பௌத்த விஹாரை மற்றும் வழிபாட்டுத்தலங்களுடன் நெருங்கிய உறவினை முஸ்லிம்கள் பேண வேண்டும். முஸ்லிம்கள் தனித்துப் பயணிக்கிறார்கள். தேசிய விவகாரங்களில் அக்கறை காட்டுவதில்லை என்றும் குற்றச்சாட்டு எழுப்பப்படுகின்றது. இவற்றைப் பொய்ப்பிக்கும் வகையில் எம்மவர்களது செயற்பாடுகள் அமைய வேண்டும்.
வாரியப்பொல ஜும்ஆப் பள்ளிவாசல் இமாம் மௌலவி எம்.வை.எம். இக்பால் (தீனி)யும் அங்கு உரையாற்றினார்.
Post a Comment