மாரடைப்பை சொல்லும், ரத்த சரித்திரம்
ஒருவருடைய ரத்தம் எந்த வகையைச் (க்ரூப்)சார்ந்தது என்பதை வைத்தேஅவருக்கு மாரடைப்பு வருமா, வராதா என்பதைத் தெரிந்துகொள்ள முடியும் என்பதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள்.2017-ம் ஆண்டின் இதய செயலிழப்புக்கான நான்காவது சர்வதேச கருத்தரங்கம் சமீபத்தில் நடந்து முடிந்திருக்கிறது. இந்த கருத்தரங்கத்துக்காக மேற்கொண்ட பிரத்யேக ஆய்வில்தான் இந்த உண்மை கண்டறியப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட ரத்த வகையைச் சார்ந்தவர்களிடத்தில் ஏற்படக்கூடிய மாரடைப்பு நோய்த்தாக்கம், தமனி அடைப்புகள், உயிரிழப்பு போன்ற இதயம் சார்ந்த நிகழ்வுகள் இந்த பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டன.இதில்தான் A, B மற்றும் AB ப்ளட் க்ரூப்பைச் சார்ந்தவர்களுக்கு O ப்ளட் க்ரூப்காரர்களைவிட மாரடைப்பு வருவதற்கான ஆபத்து அதிகம் இருப்பதாகத் தெரிய வந்திருக்கிறது.
O ப்ளட் குரூப் அல்லாத மற்ற ரத்த வகைகளில் Von willebrand factor என்கிற ரத்த உறைவுக்குக் காரணமான புரதம் அதிகமாக இருப்பதுதான் இதற்கு காரணம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். அதாவது இந்த Von willebrand factor புரதம் ரத்தநாளங்களில் எளிதில் அடைப்பை ஏற்படுத்திவிடுகிறதாம்.
மேலும் O வகையைச் சாராத ரத்தம் உள்ளவர்களுக்கு இதய செயலிழப்பு நோயாளிகளுக்கு வரக்கூடிய வீக்கம் மற்றும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் அதிகமான கேலிட்சன் - 3 எனும் ஒரு புரதமும் உள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
‘வரும் காலங்களில், மாரடைப்புக்கான காரணிகளான ரத்தக் கொழுப்பு, வயது, பாலினம் மற்றும் ரத்தக்கொதிப்பு போன்றவற்றோடு ரத்த வகையையும் நாம் முக்கிய காரணியாக எடுத்துக் கொள்வது அவசியம் என்பதை உணர்த்தியிருக்கிறது இந்த புதிய ஆராய்ச்சி’என்கிறார் ஆய்வை மேற்கொண்டநெதர்லாந்து ஆய்வாளரான டெஸ்ஸா கோலே.
Post a Comment