Header Ads



கொழும்பு துறைமுக நகரத் திட்டம் - வியக்கவைக்கும் ஏற்பாடுகள்..!


கொழும்பு துறைமுக நகரத் திட்டத்துக்காக, கடலில் இருந்து நிலத்தை மீட்கின்ற 45 வீத நடவடிக்கைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக சிஎச்ஈசி போர்ட் சிற்றி கொழும்பு நிறுவனத்தின் தலைமை விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் அதிகாரி லியாங் தோ மிங் தெரிவித்துள்ளார்.

பீஜிங்கில் உள்ள சீன துறைமுக பொறியியல் நிறுவனத்தில், நேற்று செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

‘மூன்று தூர் வாரும் கப்பல்களைக் கொண்டு, நிலப்பரப்பை கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நிலத்தை மீட்கும், நடவடிக்கைகள் 2019ஆம் ஆண்டு நிறைவடையும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். ஆரம்ப உட்கட்டமைப்பு வேலைகள் மற்றும் பாதைகள் அமைப்பு வேலைகள் 2020 இல் நிறைவடையும்.

2021இல், கடற்கரை, மரினா மற்றும் மத்திய பூங்கா என்பன தொடர்பான பணிகள் நிறைவு செய்யப்படும். அனைத்துலக நிதி நிலையத்தை அமைக்கும் பணிகள்  2023இல் நிறைவடையும். துறைமுக நகர கட்டுமானப் பணிகள் அனைத்தையும், 2016ஆம் ஆண்டு முடிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

தெற்காசியாவில் வாழ்வதற்கு மிகச்சிறந்த நகராக கொழும்பை மாற்றுவதில் இந்த திட்டத்தின் போது கவனம் செலுத்தப்படும்.

ஆரம்பத்தில் 233 ஹெக்ரெயரில் அமைக்கத் திட்டமிடப்பட்ட துறைமுக நகரத் திட்டம் தற்போது, 269 ஹெக்ரெயராக விரிவாக்கப்பட்டுள்ளது. இங்கு 83ஆயிரம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.

துறைமுக நகரத்தில் இருந்து பிரதான நெடுஞ்சாலைக்கு சுரங்கப்பாதை வழியாகவும், மேம்பாலம் வழியாகவும் இரண்டு இணைப்புகள் ஏற்படுத்தப்படும்.

30 நிமிடங்களில் விமான நிலையத்தை அடைவதற்கும் பாதை அமைப்புகள் உருவாக்கப்படும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.