Header Ads



ரணிலை நீக்கினால், மாற்று ஏற்பாடு என்ன..? ஐடியா கேட்ட மைத்திரி

பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்கவை நீக்கி, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை அந்த பதவிக்கு நியமிக்க வேண்டும் என பிரதி அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ கோரிக்கை விடுத்துள்ளார்.

அவ்வாறு இல்லாவிடின் தம்மை எதிர்க்கட்சி வரிசையில் அமர அனுமதிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதியிடம் தமது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

தமது கோரிக்கைக்கு உரிய பதில் கிடைக்காவிடின் அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்கள் அடங்கிய ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியைச் சேர்ந்த 18 பேர் அரசாங்கத்திலிருந்து வெளியேறவுள்ளதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பு வார இதழ் ஒன்று பிரதி அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோவை மேற்கோள் காட்டி வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த செய்தியில், "அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 18 பேர் அரசிலிருந்து வெளியேறி எதிர்வரும் செப்டெம்பர் மாதம் எதிர்க்கட்சி வரிசையில் அமரத் தீர்மானித்திருக்கிறோம்.

இது குறித்து கடந்த 12ஆம் திகதி ஜனாதிபதியிடம் தெரிவித்தோம். அதற்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் வரை அந்த யோசனையை கைவிடுமாறு ஜனாதிபதி எம்மிடம் கூறியுள்ளார். இந்த அரசாங்கத்தில் தொடர்ந்தும் இருப்பதற்கான உத்தேசமில்லை.

எனவே, இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடுவதற்கு வாய்ப்பு வழங்கினால் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராயலாம்.

பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்கவை நீக்கினால் அதற்கான மாற்று ஏற்பாடு என்னவென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தம்முடனான கலந்துரையாடலின் போது கேட்டிருந்தார்.

அதற்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை பிரதமராக்க தமது குழு விரும்புவதாகவும் பெரும்பான்மையானோரது விருப்பமும் அதுவே என ஜனாதிபதியிடம் கூறியதாக பிரதி அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.