Header Ads



இதயத்தை கொடுத்து, இலங்­கையில் முதல் இதயமாற்றுக்கு உதவிய பிரதீப்

(ரெ.கிறிஷ்­ணகாந்)

இலங்­கையில் முதன்­மு­த­லாக மேற்­கொள்­ளப்­பட்ட இத­ய­மாற்று சத்­திர சிகிச்சையின் வெற்­றி­கர சாத­னையை பற்றி அண்­மையில் அனை­வ­ராலும் பேசப்­பட்டு வந்­தாலும் தனது இத­யத்தை தியாகம் செய்து, இலங்­கை­யின் ­மு­த­லா­வது இத­ய­மாற்று சத்­திர சிகிச்­சைக்கு பங்­க­ளிப்பு செய்து இலங்கை மருத்­துவ வர­லாற்றில் இடம்­பி­டித்­தது கூட தெரி­யாமல் மர­ணித்­து­போன 21 வய­தான பிரதீப் சம்பத் தொடர்பில் எவரும் அறிந்­திருக்கவில்லை.

திடீர் விபத்தின் கார­ண­மாக பிரதீப் மூளைச் சாவ­டைந்­ததன் பின்­னரும் உடற்­பா­கங்­களை மற்­றை­ய­வர்­க­ளுக்கு தானம் செய்­வதன் ஊடாக தமது மகனை உயிர்­வாழ வைக்க முடியும் என அறிந்து கொண்ட பிர­தீப்பின் பெற்றோர் உட­லு­றுப்­பு­களை தியாகம் செய்ய  சம்­மதம் தெரி­வித்­தனர்.

அத்­துடன் கண்டி மாவில்­கும்­புர பிர­தே­சத்தைச் சேர்ந்த இந்த இளை­ஞரின் இத­யத்தை மாத்­தி­ர­மல்­லாது அவ­ரது சிறு­நீ­ர­கங்கள் மற்றும் இரு கண்கள் போன்­ற­வற்­றையும் வழங்­கு­வ­தற்கு அவ­ரது பெற்றோர் சம்­ம­தித்­தனர்.

பிர­தீப்பின் பெற்றோர் தங்­களால் முடிந்­த­வரை இதற்­கான ஒத்­து­ழைப்பை வழங்­கி­யி­ருந்­தனர். மகனின் உட­லு­றுப்­பு­களை தான­மாக வழங்­கி­ய­மைக்­காக கண்டி பொது வைத்­தி­ய­சா­லை­யினால் பிர­தீப்பின் பெற்­றோ­ருக்கு 6 இலட்சம் ரூபா சன்­மா­ன­மாக வழங்­கப்­பட்ட போதிலும், தமது மக­னுக்­காக செய்த புண்­ணி­ய­கா­ரி­ய­மாக இந்த உட­லு­றுப்பு தானத்தை கருதி, அவர்கள் அப்­ப­ணத்­தொ­கையை பெற்­றுக்­கொள்­வ­தற்கு மறுத்­தி­ருந்­தனர்.

உயி­ரி­ழந்த பிர­தீப்பின் தந்தை ஒரு தொழி­லாளி. தாய் தொழில் எதுவும் செய்­யாமல் வீட்­டி­லி­ருந்து வரு­கிறார். பிர­தீப்பின் மூத்த சகோ­தரி சில காலத்­துக்கு முன்பு திரு­மணம் செய்து வேறிடம் சென்­றுள்ள நிலையில் அவ­ரது இளைய சகோ­தரி பாட­சாலை கல்­வியை நிறைவு செய்­து­கொண்டு வீட்டில் உள்ளார்.

பொரு­ளா­தார சிக்கல் கொண்ட இக்­கு­டும்­பத்தின் ஒரே­யொரு ஆண்­பிள்­ளை­யான பிரதீப், சாதா­ரண தரம் வரை கற்­றி­ருந்த நிலையில் தனது கல்­வியை இடை­நி­றுத்­திக்­கொண்டார்.

அதன்­பின்னர் தொழி­லொன்றை எதிர்­பார்த்­தி­ருந்த நிலையில் பிலி­மத்­த­லாவை பிர­தே­சத்­தி­லுள்ள கராஜ் ஒன்றில் பணி­யாற்­று­வ­தற்கு வாய்ப்பு கிடைத்­தது. அவ­ருடன் அவ­ரது சகோ­த­ரியின் கண­வரும் தொழில் பயில்­வ­தற்கு அவ்­வி­டத்­துக்கு சென்­றி­ருந்தார்.

அவ்­வாறே அண்­மையில், இவ்­வி­ரு­வரும் தொழி­லுக்­காக மோட்டார் சைக்­கிளில் பய­ணித்துக் கொண்­டி­ருக்­கையில் டெங்கு ஒழிப்பு நட­வ­டிக்­கை­க­ளுக்­காக சென்று கொண்­டி­ருந்த வேன் ஒன்­றினால் மோதுண்டு இரு­வரும் விபத்­துக்­குள்­ளா­கினர். இவ்­வி­பத்தில் இரு­வரும் படு­கா­ய­ம­டைந்­தி­ருந்த போதிலும் பிர­தீப்பின் நிலை கவ­லைக்­கி­ட­மா­கி­யது.

விபத்­தை­ய­டுத்து பிரதீப் பம்­ப­ர­தெ­னிய வைத்­தி­ய­சா­லைக்கு கொண்டு செல்­லப்­பட்டு பின்னர் மேல­திக சிகிச்­சை­க­ளுக்­காக கண்டி பொது வைத்­தி­ய­சா­லைக்கு மாற்­றப்­பட்டார். அங்கு வைத்­தி­யர்கள் தம்மால் முடிந்­த­வரை முயற்சி செய்த போதிலும் பிரதீப் மூளைச் சாவ­டை­வதை அவர்­களால் தடுத்­தி­ருக்க முடி­ய­வில்லை.

இத­னை­ய­டுத்து பிர­தீப்பின் உட­லு­றுப்­பு­களை தானம் செய்­வது தொடர்­பாக அவ­ரது பெற்­றோ­ரிடம் வைத்­தி­ய­சாலை நிர்­வா­கத்­தினர் கலந்­து­ரை­யா­டி­ய­த­னை­ய­டுத்து அவர்கள் அதற்கு சம்­மதம் தெரி­வித்­தனர்

பின்னர், பிர­தீப்பின் இதயம் சத்­தி­ர­சி­கிச்­சையின் மூலம் பெறப்­பட்டு அதனை அநு­ரா­த­பு­ரத்தை சேர்ந்த 34 வய­தான பெண்­ணொ­ரு­வ­ருக்கு பொருத்தி இலங்கையின் முதலாவது இதயமாற்று சத்திரசிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. அத்துடன் அவரது சிறுநீரகங்களும் வேறு இருவருக்கு பொருத்தப்பட்டன. 

தமது மகன் தம்மை விட்டுப் பிரிந்து சென்றமை ஒருபுறம் வருத்தமளித்தாலும், அவரது உடலுறுப்புகள் மூலம் 5 பேர் பெரும் பயனடைவதையிட்டு தாம் மகிழ்ச்சி கொள்வதாக பிரதீப்பின் பெற்றோர் பெருமிதம் கொண்டனர்.

No comments

Powered by Blogger.