Header Ads



அரசமைப்பு விவகாரம் சூடுபிடிப்பு - ஜனாதிபதி, பிரதமர் தலைமையில் முக்கிய கூட்டம்

புதிய அரசமைப்புக்கு எதிர்ப்புகள் வலுத்து வரும் நிலையில், அரசமைப்பு தயாரிப்புப் பணி சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்தி உறுதியான முடிவொன்றை எடுப்பதற்காக ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் தலைமையில் ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கிடையிலான விசேட கூட்டமொன்று விரைவில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கான ஏற்பாடுகள் தற்போது இடம்பெற்று வருகின்றன என்றும், கூட்டத்தின் பின்னர் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் கூட்டு அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளனர் என்றும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

புதிய அரசமைப்புக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், மஹிந்த தலைமையிலான பொது எதிரணியும் கடும் எதிர்ப்பை வெளியிட்டன.

இவ்விரு தரப்பினரையும் சமரசப்படுத்தி பொதுவானதொரு இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடும் முயற்சிகளை மேற்கொண்டு வந்தார்.

இந்த நிலையில், புதிய அரசமைப்போ அல்லது அரசமைப்புத் திருத்தமோ நாட்டுக்கு அவசியமில்லை என மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தனர். இதனால், அரசமைப்பு விவகாரம் சூடுபிடித்துள்ளது.

மகாநாயக்க தேரர்களை நேற்றுமுன்தினம் சந்தித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அவர்களை திருப்திப்படுத்தும் வகையில் அறிவிப்புகளை விடுத்துள்ளார்.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே ஆளுங்கட்சி கூட்டத்தை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

புதிய அரசமைப்பின் முக்கியத்துவம் குறித்து மக்களுக்கு விளக்கமளித்தல் உட்பட மேலும் சில முக்கிய முடிவுகள் இதன்போது எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.