சவூதி இளவரசர் - ரவி சந்திப்பு, ஜனாதிபதியின் சவூதி விஜயம் தொடர்பில் ஆராய்வு
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளடங்கிய இலங்கைத் தூதுக்குழு அடுத்த வருட ஆரம்பத்தில் சவூதி அரேபியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொள்வது சம்பந்தமான கலந்துரையாடலொன்று சவூதி இளவரசர் பஹத் பின் முக்ரீன் பின் அப்துல் அஸீஸ{டன் இன்று -24- வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் இடம்பெற்றது.
புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் ஏற்பாட்டில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சர்வதேச முதலீட்டாளரும், சவூதி அரேபியாவின் இளவரசருமான பஹத் பின் முக்ரீன் பின் அப்துல் அஸீஸ் இன்று திங்கட்கிழமை வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவை அவரது அமைச்சில் சந்தித்து பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடினார்.
இதன்போது, இலங்கைக்கும் - சவூதி அரேபியாவுக்கும் இடையில் உள்ள நீண்ட கால உறவை மேலும் வலுப்படுத்திக் கொள்வது சம்பந்தமாக கவனம் செலுத்தப்பட்டதுடன், அடுத்த வருட ஆரம்பத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இலங்கைத் தூதுக்குழுவொன்று சவூதி அரேபியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்வது சம்பந்தமாகவும் ஆராயப்பட்டன.
இதேவேளை, இலங்கைக்கு வழங்கப்படுகின்ற ஹஜ் கோட்டாக்கள் மிகவும் குறைவாக உள்ளதால் இலங்கை முஸ்லிம்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக சுட்டிக்காட்டிய அமைச்சர் ரவி கருணாநாயக்க, எனவே, இலங்கைக்கு வழங்கப்படுகின்ற ஹஜ் கோட்டாக்களை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுத்தார்.
இது தொடர்பில் சம்பந்தப்பட்ட ஹஜ் ஏற்பாட்டுக் குழுவுடன் கலந்துரையாடுவதாகவும், எதிர்வரும் ஆண்டு இலங்கைக்கு அதிகப்படியான ஹஜ் கோட்டாக்களை வழங்க தான் நடவடிக்கை எடுப்பதாகவும் இதன்போது சவூதி இளவரசர் உறுதியளித்தார்.
மேற்படி கலந்துரையாடலில் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், மட்டக்களப்பு கெம்பஸ் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஹிராஸ் ஹிஸ்புல்லாஹ், அஷ்ஷேய்க் மசூர் மௌலானா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டமைக் குறிப்பிடத்தக்கது.
Post a Comment