சலுகை விலையில் அரிசி கிடைக்கும் - ஜனாதிபதி
கடந்தகால கடும் வறட்சி காரணமாக நெல் உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளதனால் அரிசியின் விலை உயர்வடைந்தாலும், சந்தையில் உள்நாட்டு அரிசியின் விலை மேலும் அதிகரித்தால் அரசாங்கத்துக்கு நட்டம் ஏற்பட்டாலும் அரிசியை இறக்குமதி செய்து சலுகை விலையில் மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமென ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
நேற்று திங்கட்கிழமை முற்பகல் பொலனறுவையில் நடைபெற்ற பாடசாலை நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
அரிசி விலை எவ்வளவுதான் அதிகரித்தாலும், அரசாங்கத்திலுள்ள பெரியவர்களுக்கு அது தெரிவதில்லை என தேசிய பத்திரிகை ஒன்றில் வெளியான செய்தியை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, சாதாரண குடும்பத்திலிருந்து வந்த மக்களின் கவலை, வேதனைகளை புரிந்துகொள்ளக்கூடிய தலைவர் என்ற வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் அந்த அனுபவத்துடனே மேற்கொள்வதாகவும், நாட்டு மக்களை ஒருபோதும் பட்டினி போட தான் தயாரில்லை என்றும் தெரிவித்தார்.
தற்போதைய அரசாங்கத்தின் கீழ் சமூக, பொருளாதார, அரசியல் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளதுடன், எந்த சவால் வந்தாலும் சம்பந்தப்பட்ட செயற்றிட்டங்களை குறிக்கோளுடன் முன்னெடுப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
பொலனறுவை, பலுகஸ்தமன ஜனாதிபதி மாதிரி ஆரம்பப் பாடசாலை ஜனாதிபதியால் நேற்று முற்பகல் மாணவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
குறிப்பிட்ட பிரதேசங்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டிருந்த பாடசாலை உரிமையை வடமத்திய மாகாணம் உள்ளிட்ட ஏனைய பிரதேசங்களுக்கும் வழங்கி பிள்ளைகளுக்கு சமமான கல்வி செயற்பாட்டை வழங்குவது இன்று நாட்டில் இடம்பெறும் முக்கியமான நடவடிக்கை என்றும் ஜனாதிபதி இங்கு தெரிவித்தார்.
Post a Comment