ஞானசாரர் கைது செய்யப்பட்டிருந்தால், முஸ்லிம்கள் தாக்கப்பட்டிருப்பார்கள்...!
பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் நீதிமன்றத்தில் சரணடைவது தாமதிக்கப்பட்டதன் பின்னணியில் புலனாய்வுப் பிரிவினரின் நடவடிக்கை ஒன்று இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஞானசார தேரரை பொலிஸார் கைது செய்திருந்தால், நாட்டின் சில இடங்களில் முஸ்லிம் மக்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த தயார் நிலைமை காணப்படுவதாக கிடைத்த புலனாய்வு தகவலுக்கு அமையவே ஞானசார தேரர் நீதிமன்றத்தில் சரணடைவது தாமதம் செய்யப்பட்டதாக புலனாய்வு பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஞானசார தேரரை கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை பிறப்பிக்கும் முன்னர் இருந்தே அவர் வந்து செல்லும் இடங்கள் குறித்து புலனாய்வுப் பிரிவினர் அறிந்து வைத்திருந்தனர்.
நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்த போது அவர் எங்கிருந்தார் என்பதையும் புலனாய்வு பிரிவினர் தெரிந்து வைத்திருந்ததுடன் அவரது பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுத்திருந்தனர்.
அதேவேளை ஞானசார தேரரை சந்திக்க வருவோர் பற்றியும் புலனாய்வுப் பிரிவினர் தகவல்களை திரட்டியுள்ளனர்.
ஆளும் கட்சி மற்றும் கூட்டு எதிர்க்கட்சியை சேர்ந்த சில அரசியல்வாதிகள், உயர் பொலிஸ் அதிகாரிகள் சிலர் மாத்திரமல்லது அமைச்சுக்களின் செயலாளர்கள் சிலரும் ஞானசார தேரரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
ஞானசார தேரரை சந்திக்க சென்றவர்களின் பெயர் விபரங்கள், திகதி மற்றும் நேரம் என்பவற்றையும் புலனாய்வுப் பிரிவினர் குறித்து வைத்துள்ளனர்.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள புலனாய்வுப் பிரிவின் அதிகாரி ஒருவர், நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்த தினத்திற்கு முன்னர், குருணாகலில் நடந்த சம்பவத்தில் இருந்து சிங்கள - முஸ்லிம் கலவரத்தை ஏற்படுத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை முறியடிக்கும் பொறுப்பு எமக்கு வழங்கப்பட்டிருந்தது.
நாட்டிற்குள் அப்படியான கலவரமான நிலைமை ஏற்பட்டிருந்தால், அது நாடு முழுவதும் பரவும் ஆபத்து காணப்பட்டது. ஞானசார தேரர் கைது செய்யப்படுவதை விட கலவரம் ஏற்படுவதை தடுப்பது முக்கியமானது என அந்த அதிகாரி கூறியுள்ளார்.
பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், ஞானசார தேரர் தான் வசித்து வரும் விகாரைக்கு பல முறை வந்து சென்றுள்ளதுடன், நீதிமன்றத்தில் செல்லாது தவிர்க்க விசேடமான இடமொன்றில் தலைமறைவாக இருக்க முயற்சிக்கவில்லை புலனாய்வுப் பிரிவினர் கூறியுள்ளனர்.
இதனிடையே ஞானசார தேரர் கைது செய்யப்பட்டு, அதன் பின்னர் ஏதோ ஒரு விதத்தில் கலவரமான நிலைமை ஏற்பட்டிருந்தால், இனவாதத்தை அடிப்படையாக கொண்டு அரசாங்கத்தை ஸ்திரமற்ற நிலைமைக்குள் கொண்டு செல்ல சில எதிர்க்கட்சி அணிகள் திட்டமிட்டதாகவும் புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல் கிடைத்திருந்தது.
இந்த தகவல்களை அடிப்படையாக கொண்டு நாட்டிற்கு இனவாத்தை பரப்பி பொது அமைதியை சீர்குலைக்கும் முயற்சிகளில் ஈடுபட்ட சிலர் கைது செய்யப்பட்டனர்.
விசாரணைகள் இன்னும் முடிவடையவில்லை என்பதால், தகவல்களை வெளியிட முடியாது என புலனாய்வுப் பிரிவின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டிற்குள் இனவாத கலவரம் ஏற்படுவதை தடுக்கவே ஞானசார தேரர் நீதிமன்றத்தில் சரணடைந்த போது, அவருக்கு பிணையை பெற்றுக்கொடுக்க ஊழல் எதிர்ப்பு முன்னணியின் தலைவர் உலப்பனே சுமங்கள தேரர் தலையீடுகளை மேற்கொண்டதாகவும் அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் சிலர் அறிந்த அவர் இதனை செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அதேவேளை இனவாதத்தை அடிப்படையாக கொண்டு நாட்டிற்குள் அமைதியை சீர்குலைக்க நடவடிக்கை எடுத்து வரும் நபர்கள் மற்றும் அமைப்புகள் சம்பந்தமாக புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் எந்த சந்தர்ப்பத்திலும் அவர்களை உடனடியாக கைது செய்ய திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Post a Comment