Header Ads



முஸ்லிம் சமூகத்துக்கு பேராபத்து சூழ்ந்துள்ளது - றிஷாட்

அரசியல் ரீதியான கொள்கை வேறுபாடுகள், தனிப்பட்ட அபிலாஷைகள் மற்றும் இன்னோரன்ன விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் சமூகத்தின் நலன்களை முன்னிறுத்தி தூர நோக்க சிந்தனையுடன் முஸ்லிம் சமூகம் ஒன்றுபட வேண்டிய தருணம் வந்துவிட்டதாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். 

லங்கா அசோக் லேலன்ட் பி எல் சி கம்பனியின் சாய்ந்தமருது – கல்முனையை மையமாகக்கொண்டு இயங்கவுள்ள கிளையினை சாய்ந்தமருதுவில் அங்குரார்ப்பணம் செய்து வைத்த பின்னர் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். கம்பனியின் தலைவர் சிராஸ் மீராசாஹிப் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் அமைச்சர் கூறியதாவது.

நாட்டின் இறைமைக்கு துளியளவேனும் பங்கம் விளைவிக்காத, ஆயுதத்தில் நாட்டம் காட்டாத, ஆயுததாரிகளை ஊக்குவிக்காத, உதவியளிக்காத, எந்த ஓர் இனத்துக்கும் அநீதி இழைக்காத முஸ்லிம் சமூகத்துக்கு பேராபத்து சூழ்ந்துள்ளது.  யாரை நம்பினோமோ யாரைக் கொண்டுவர எம்மை அர்ப்பணித்தோமோ அவர்கள் மீது சந்தேகம் வந்து விட்டது அவர்களில் நம்பிக்கை இழந்துவிட்டோம். அவர்களின் செயறல்ப்பாடுகளில். முஸ்லிம்களின் இருப்புக்கு ஏற்பட்டிருக்கும் இந்தப் பாரிய அச்சுறுத்தலை எதிர்கொள்ள நாம் ஒன்றுபட வேண்டியிருக்கின்றது.     சமூகத்தில் உள்ள அத்தனை சாராரும் ஒருமித்து பேச வேண்டிய காலகட்டம் உருவாகி இருக்கின்றது. நமது சமூகத்துக்கு எற்பட்டுள்ள ஆபத்துக்களையும் சவால்களையும் தாண்டிச்செல்லக்கூடிய வகையில் இளைஞர்கள், இன்னும் பல்துறை சார்ந்தவர்களை சமூக ஒற்றுமைக்காக தயார்படுத்த வேண்டிய நிலையில் இருக்கின்றோம். அரசியல் ரீதியான பிளவுகளைத்தாண்டி இந்த முயற்சியை நாம் முன்னெடுக்க வேண்டும். திட்டமிட்ட அடிப்படையில் இந்த சவால்களுக்கு நாம் முகங்கொடுக்க வேண்டியிருக்கின்றது. 

நமது சமூகத்தை சீண்டி வேண்டுமென்றே வம்புக்கிழுக்க இனவாதிகள் தருணம் பார்த்திருக்கின்றனர்.  கல்முனைத் தொகுதிக்கென ஒரு சிறப்பான இடம் உண்டு.  முஸ்லிம் அரசியலில் வெளிச்சத்தை ஏற்படுத்தி, முஸ்லிம்களை அரசியல் மற்றும் சமூக ரீதியில் சிந்திக்க வைத்த ஒரு பூமி. மர்ஹூம் அஸ்ரப் இந்த மண்ணிலிருந்து ஓர் அரசியல் எழுச்சியை ஆரம்பித்த்தன் பிரதிபலனை நாம் இன்று அனுபவிக்கின்றோம். தேசியக் கட்சிகளில் ஊறி இருந்தவர்களை சுயமாக சிந்திக்க வைத்து, வடக்குக் கிழக்கு மாத்திரமன்றி வெளி மாவட்டங்களிலும் உள்ள முஸ்லிம்களை ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து முஸ்லிம் அரசியலுக்கு ஒரு கனதியைக் கொடுத்தவர். 

பணபலம், அதிகாரபலமின்றி இந்த முயற்சியில் அவர் வெற்றி கண்டார். துப்பாக்கிகள் மாத்திரமே நீதிபதிகளாக செயற்பட்ட ஒரு பயங்கரமான  காலகட்டத்தில் அவர் இந்த முயற்சியில் வெற்றி கண்டார். அவர் மேற்கொண்ட அடித்தளமே அரசியல் பின்புலமில்லாத, பணபலமில்லாத சாதாரண குடும்பத்தில் பிறந்த என்னையும் அமீர் அலி, சிராஸ், ஜெமீல் போன்றவர்களையும் அரசியலில் காலூணன்றச் செய்தது.

கல்முனையில் இரண்டு துருவங்களாக ஒரு காலத்தில் இருந்து அரசியல் செய்த முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஜெமீல், முன்னாள் மேயர் சிராஸ் ஆகியோரை அகில இலங்கை மக்கள் காங்கிரசுக்குள் உள்வாங்கி சமூகத்துக்கான பணிகளை முன்னெடுக்கச் செய்துள்ளோம். சகோதரர் ஜெமீல் இந்த மண்ணின் மூத்த அரசியல்வாதி. அரசியலில் அனுபவம், ஆற்றல் சமூகப்பற்று மிக்கவர.; அதே போன்று முன்னாள் மேயர் சகோதரர் சிராஸ் துடிப்பானவர், சமூகப்பற்றாளர். அதே போன்று அவர் மேயராக இருந்த காலத்தில் ஏனைய மேயர்களுக்கு உதாரண புருஷராக திகழ்ந்தவர் எனவே இந்த அரசியல்வாதிகளன் இணைவு கல்முனைத் தொகுதிக்கு மாத்திரமன்றி முஸ்லிம் சமூகத்துக்கும் பயன்பட வேண்டும். என்று அமைச்சர் கூறினார்.  

இந்த நிகழ்வில் பிரதியமைச்சர்  அமீர் அலி, மக்கள் காங்கிரசின் பிரதித்தலைவர் ஜெமீல், செயலாளர் சுபைதீன், கட்சியின் முக்கியஸ்தர்களான இஸ்மாயில், ஜிப்ரி, அப்துல் மஸீத் உட்பட பலர் பங்கேற்றிருந்தனர்.

No comments

Powered by Blogger.