Header Ads



அம்பாறையில் 86 இடங்களில் புதிதாக, புத்தர் சிலைகளை வைக்க தீர்மானம்

அம்பாறை மாவட்டத்தில் தமிழ், முஸ்லிம் பகுதிகளான கரையோரப் பகுதிகளில் 86 இடங்களில் புத்தர் சிலை வைப்பதற்க்கான வர்த்தமானி அறிவித்தல் செய்யப்பட்டுள்ளதாக அறிய வருகின்றது.

மஹிந்த காலத்து அரசு இலங்கை முழுவதையும் சிங்கள மயமாக்குவது என்னும் திட்டத்தில் 2014 ஒக்டோபர் 10 ஆம் திகதி மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் அறிவிப்புச் செய்துள்ள வர்த்தமானி அறிவித்தல் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

2014 ஒக்டோபர் 10 வர்த்தமானி அறிவித்தல்

குறித்த வர்த்தமானி, கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் திணைக்களத்திற்கு சொந்தமான 246 இடங்கள் பற்றி அறிவிக்கின்றது.

அப்போதைய தேசிய மரபுரிமைகள் அமைச்சர் ஜகத் பாலசூரிய கையொப்பமிட்டு, மஹிந்த அரசாங்கம் இந்த வர்த்தமானி அறிவித்தலை அப்போது அறிவிப்பு செய்துள்ளது.

பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவில் 5 இடங்களும், திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவில் 36 இடங்களும், இறக்காமம் பிரதேச செயலாளர் பிரிவில் 13 இடங்களும், ஆலயடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் 9 இடங்களும், அக்கரைப்பற்று பிரதேசத்தில் 6 இடங்களும், அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் 11 இடங்களும், சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவில் 4 இடங்களும், கல்முனை பிரதேசத்தில் 2 இடங்களுமாக முஸ்லிம், தமிழர்களுக்குரிய 86 இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

இங்கு அடையாளப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்கள் என்பது மனித சமுதாயம் தோன்றிய காலம் தொட்டு இன்று வரையும் தமிழ், முஸ்லிம்கள் வாழும் வாழ்ந்துவரும் பிரதேசங்களாகும்.

இந்தப்பகுதிகளில் சிங்களவர்கள் ஒரு நாளும் வாழ்ந்தது கிடையாது. அப்படி இருக்க பொத்துவில் திருக்கோவில், ஆலயடிவேம்பு, அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, சம்மாந்துறை, கல்முனை ஆகிய பிரதேசங்களில் எதற்காக புத்தர் சிலை வைக்க வேண்டும்.

குறித்த வர்த்தமானியில் பிரச்சினைக்குரிய இடங்களாக குறிவைக்கப்படுவது முஸ்லிம், தமிழர்களுக்குரிய பூர்வீக நிலங்களாகும்.

இறக்காமம் சிலைப் பதிப்புக்கு சூத்திரதாரியாக செயற்பட்டதாகக் கூறப்படும் அமைச்சர் தயாகமகே விடுத்துள்ள அறிக்கையொன்றில், கல்முனை தொடக்கம் பொத்துவில் வரைக்கும் தீகவாவிக்கு சொந்தமாக 12,000 ஏக்கர் காணிகள் உள்ளன என்று குறிப்பிட்டிருந்தமையும் இங்கு கவனிக்கத்தக்கதாகும்.

இறக்காமம், மாயக்கல்லி சிலை வைப்பு விவகாரம் கிழக்கு மாகாணத்தில் பாரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில் மேலும், மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலும் மிக விரைவில் புத்தர் சிலைகள் எழும்பும். ஆங்காங்கு சிலைக்கு எதிராக தமிழ் முஸ்லிம் மக்கள் எதிர்ப்புக்கள் கிளம்பும். இதன் மூலம் பாரிய திட்டம் ஒன்றில் அரசு முன்னகர்வு செய்யும்.

 M.M.Nilamdeen

No comments

Powered by Blogger.