7 மாதத்தில் 3,785 சிறுவர் துஷ்பிரயோக முறைப்பாடுகள் - 47 சிறுவர் கடத்தல்கள்
இந்த ஆண்டில் இதுவரையிலான ஏழுமாத காலத்தில் 3 ஆயிரத்து 785 சிறுவர் துஷ்பிரயோக முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. கொழும்பிலேயே அதிகளவிலான இவ்வாறான சம்பவங்கள் பதிவாகியுள்ளமையும் தெரிய வந்துள்ளது. இதேவேளை, கடந்த ஐந்து மாதங்களில் 47 சிறுவர் கடத்தல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இலங்கையில் பல்வேறு குற்றங்கள் பதியப்பட்டு வரும் நிலையில் சிறுவர் துஷ்பிரயோகங்கள் இவற்றில் அதிகமாக இடம்பெற்று வருவதாக கூறப்படுகின்றது. இந்த ஆண்டில் இதுவரையிலான காலப் பகுதி வரையில் 3 ஆயிரத்து 785 சிறுவர் துஷ்பிரயோக குற்றங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.
இவற்றில் 956 முறைப்பாடுகள் சிறுவர்கள் மீதான வன்மையான தாக்குதல் எனவும், 602 முறைப்பாடுகள் குழந்தைகளின் கல்வி உரிமை பறிக்கப்பட்டுள்ளமை தொடர்பிலும், 426 முறைப்பாடுகள் சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பிலும், 117 முறைப்பாடுகள் குழந்தைகளை மிகவும் மோசமான வகையில் பாலியல் வன்கொடுமை களுக்கு உட்படுத்தியமை தொடர்பிலும் 102 முறைப்பாடுகள் சிறுவர்களை வேலைக்கு அமர்த்தியமை குறித்தும் பதியப்பட்டுள்ளன. அதேபோல் கடந்த ஐந்து மாதங்களில் 47 சிறுவர் கடத்தல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
மேலும் இலங்கையில் அதிகளவிலான குற்றங்கள் பதியப்பட்டுள்ள மாவட்டமாக கொழும்பு மாவட்டம் பதிவாகியுள்ளது. கொழும்பில் கடந்த ஆறு மாதகாலத்தில் 569 குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளது.
கம்பஹா மாவட்டத்தில் 420 முறைப்பாடுகளும், களுத்துறை மாவட்டத்தில் 283 சம்பவங்களும் காலி மாவட்டத்தில் 259 சம்பவங்களும், இரத்தினபுரி மாவட்டத்தில் 214 குற்றச்சாட்டுகளும் பதிவாகியுள்ளன. மேலும் சிறுவர் கடத்தல் சம்பவங்கள் மற்றும் சிறுவர் மீதான வன்கொடுமைகள், பாலியல் தொல்லைகள் குறித்து முறைப்பாடு செய்ய தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை 1929 என்ற அவசர இலக்கத்தை வழங்கியுள்ளது.
இந்த இலக்கத்துடன் அழைப்பை ஏற்படுத்தி குறித்த முறைப்பாடுகளை உடனடியாக அறியப்படுத்த முடியும்.மேலும் இது 24 மணிநேர சேவையாக செயற்படுவதாகவும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை குறிப்பிட் டுள்ளது.
Post a Comment