Header Ads



கத்தார் மீதான நிபந்தனைகள் கைவிடப்பட்டது..!

கத்தார் மீதான தடையை முன்னெடுத்துள்ள நான்கு அரபு நாடுகள், கடந்த மாதம் தாங்கள் வைத்த 13 குறிப்பிட்ட நிபந்தனைகளை கத்தார் நிறைவேற்ற வேண்டும் என மேற்கொண்டு வலியுறுத்தப் போவதில்லை.

ஐக்கிய நாடுகள் சபையில் செய்தியாளர்களிடம் பேசிய சௌதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்டுகள், பஹ்ரைன், எகிப்து ஆகிய நாடுகளின் தூதரக அதிகாரிகல், கத்தார் தற்போது ஆறு முக்கிய கொள்கைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என விரும்புவதாகத் தெரிவித்துள்ளனர்.

பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதத்தை எதிர்க்க உறுதி பூணுவது, ஆத்திரமூட்டல் மற்றும் தூண்டுதல் செயல்களை கத்தார் முடிவுக்குக் கொண்டுவருவது போன்றவை இந்த கோரிக்கையின் முக்கிய அம்சங்களில் அடங்கும்..

தீவிரவாதிகளுக்கு உதவுவதாகக் கூறப்படுவதை மறுத்து வரும் கத்தாரிடம் இருந்து இதற்கு உடனடியாக எந்தப் பதிலும் வரவில்லை.

நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையில் கூடியிருந்த செய்தியாளர்களிடம் பேசிய நான்கு அரபு நாடுகளில் ராஜீய அலுவலர்கள், இந்த நெருக்கடியினை இணக்கமாகத் தீர்த்து கொள்ள விரும்புவதாகத் தெரிவித்தனர்.

அல் ஜசீராவை மூடுவது அவசியமில்லை என்றாலும் வன்முறையைத் தூண்டுவது மற்றும் வெறுக்கத்தக்கப் பேச்சினை அல் ஜசீரா நிறுத்துவது அவசியமான ஒன்று என செளதி பிரதிநிதி கூறினார்.

``அல் ஜசீராவை மூடாமலே இதனைச் செயல்படுத்த முடியும் என்றால், அதுவும் நல்லதே. நோக்கங்கள் மற்றும் கொள்கைகள் இடம்பெற்றிருக்க என்பதே முக்கியமான விஷயம்`` என அசோசியேடட் பிரஸிடம் அவர் கூறியிருக்கிறார்.

``நமது பிராந்தியத்தில் பயங்கரவாதத்தை அல்லது தீவிரவாதத்தை தடுக்கும் முக்கிய கொள்கைகளை கத்தார் ஏற்க விரும்பவில்லை என்றால், நிலைமை கடினமானதாக இருக்கும்``என வளைகுடா கூட்டுறவு கவுன்சிலில் கத்தார் தொடர்ந்து இருப்பதைப் பற்றி குறிப்பிட்டு ஐக்கிய அரபு எமிரேட்டின் நிரந்தர பிரதிநிதி லானா நுஸ்ஸிபே கத்தாரை எச்சரித்துள்ளார்.

அண்டை நாடுகளால் தீவிரவாதிகள் என முத்திரை குத்தப்பட்ட முஸ்லிம் சகோதரத்துவ அமைப்புக்கு உதவியதை கத்தார் ஒப்புக்கொண்டுள்ளது. ஆனால், ஐ.எஸ் மற்றும் அல்-கய்தா போன்ற ஜிகாதி குழுக்களுக்கு உதவுவதாக் கூறப்படும் குற்றச்சாட்டினை கத்தார் மறுக்கிறது.

No comments

Powered by Blogger.