67 முகவர் நிறுவனங்கள், கறுப்புப் பட்டியலில் இணைப்பு
இந்த வருடத்தின் கடந்த ஆறு மாத காலப்பகுதியில் 67 வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்கள் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்கள் தொடர்பில் பணியகத்துக்குக் கிடைக்கும் முறைப்பாடுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு சமுகமளிக்காமை,
பணியகத்தில் பதிவு செய்யாமல் சட்டவிரோதமாக ஆட்களை வெளிநாடுகளுக்கு அனுப்புதல், பணியகத்துக்கு போலி ஆவணங்களை சமர்ப்பித்தல், வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்கு செல்பவர்களிடம் பணமோசடி செய்தல், வெளிநாடுகளிலுள்ள மனிதவள முகாமைத்துவ நிறுவனங்களிடம் தரகுப் பணத்தை பெற்றுக்கொண்ட பின்னரும் ஆட்களை அனுப்பாமல் ஏமாற்றுதல் போன்ற குற்றச்சாட்டுகளின் கீழேயே குறித்த நிறுவனங்கள் கறுப்பு பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இந்த வருடத்தில் 67 நிறுவனங்களும், 2016ல் 61 நிறுவனங்களும் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பதாக பணியகத்தின் உயரதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
இதுவரை பணியகத்தில் 702 முகவர் நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், அவற்றுள் கொழும்பில் 355, குருநாகலில் 130, கண்டியில் 44, அநுராதபுரத்தில் 25 நிறுவனங்களும் ஏனையவை நாட்டின் மற்றைய பகுதிகளில் இயங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Post a Comment