அல் அக்ஸாவில் இஸ்ரேல் அராஜகம் - 3 பலஸ்தீனர்கள் சுட்டுக்கொலை, 400 பேர் படுகாயம்
(விடிவெள்ளி)
ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெரூஸலத்திலுள்ள மஸ்ஜிதுல் அக்ஸா வளாகத்தில் இஸ்ரேல் ஏற்படுத்தியுள்ள புதிய பாதுகாப்புக் கெடுபிடிகளை நீக்குமாறு கோரி பலஸ்தீனர்கள் கடந்த வெள்ளிக்கிழமை பாரிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது குறித்த போராட்டத்தை கலைக்க இஸ்ரேலிய இராணுவத்தினர் மேற்கொண்ட அராஜக நடவடிக்கைகளின் போது மூன்று பலஸ்தீன இளைஞர்கள் உயிரிழந்துள்ளதுடன் 400 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர் .மேலும் பல நூறு இளைஞர்களை இஸ்ரேலிய இராணுவத்தினர் கைது செய்துள்ளனர்.
டெம்பிள் மௌன்ட் என யூதர்களால் அழைக்கப்படும் ஹரம் அல்-ஷரீபில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதைத் தொடர்ந்து கடந்த 14 ஆம் திகதி தொடக்கம் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களில் பதற்ற நிலை உருவாகியது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து இஸ்ரேலிய பொலிஸார் அல்-அக்ஸா பள்ளிவாசலை தற்காலிகமாக மூடியதோடு புனிதத் தலத்தில் வெள்ளிக்கிழமை தொழுகை நடாத்துவதற்கும் தடை விதித்தனர்.
எனினும் சர்வதேச ரீதியாக எழுந்த விமர்சனங்கள் காரணமாக இஸ்ரேல் ஜுலை 16 ஆம் திகதி அல்-அக்ஸா பள்ளிவாசல் வளாகத்தைத் திறந்தபோதிலும், உலோகங்களை அடையாளம் காணும் கருவிகள் மற்றும் சி.சி.ரி.வி. கமராக்கள் என்பன நுழைவாயிலில் பொருத்தப்பட்டன.
அதனைத் தொடர்ந்து பள்ளிவாசலினுள் செல்ல மறுத்த பலஸ்தீனர்கள் திறந்த வெளியில் தமது தொழுகையினை நிறைவேற்றினர். அதன்போதும் வன்முறைகள் வெடித்தன.
கடந்த சில தினங்களாக இஸ்ரேலின் நேரடித் துப்பாக்கிச் சூட்டினாலும், இறப்பர் குண்டுகளினாலும் 400 இற்கும் மேற்பட்ட பலஸ்தீனர்கள் காயமடைந்துள்ளதோடு சுமார் 100 பேரளவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செம்பிறைச் சங்கம் தெரிவித்துள்ளது.
ஜெரூஸலம் அல்-குத்ஸின் வீதியில் இஸ்ரேலியப் படையினருடன் ஏற்பட்ட மோதல்களில் மூன்று பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதோடு மேற்குக்கரை குடியேற்றப்பகுதியில் கத்திக்குத்து மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தில் மூன்று இஸ்ரேலியர்கள் உயிரிழந்துள்ளனர்.
கடந்த சனிக்கிழமை கற்களை வீசிய பலஸ்தீனர்களைக் கலைப்பதற்கு இஸ்ரேலியப் படையினர் போலிக் குண்டுகளையும் நீர்த்தாரைப் பிரயோகத்தையும் மேற்கொண்டனர்.
இஸ்ரேலினால் அல் அக்ஸா மீது விதிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகள் மிகவும் உயர்ந்த அளவில் கூருணர்வுமிக்க பிரதேசத்தை தனது ஆட்சியதிகாரத்தினுள் கொண்டுவருவதற்காகவும் அதன் தன்மையை மாற்றுவதற்காகவும் எடுக்கப்படும் முயற்சியாக பலஸ்தீனர்கள் கருதுகின்றனர்.
அல் அக்ஸா பள்ளிவாசல் வளாக நுழைவாயிலில் பொருத்தப்பட்டுள்ள உலோகங்களை அடையாளம் காணும் கருவிகள் அகற்றப்படும் வரை டெல் அவிவுடனான அனைத்து உத்தியோகபூர்வ தொடர்புகளையும் இடைநிறுத்துமாறு பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே, உலோகங்களை அடையாளம் காணும் கருவிகள் அகற்றப்படும் வரை இஸ்ரேலிய கட்டுப்பாட்டிற்கு எதிரான எமது போரட்டம் தொடருமெனவும், அதிலிருந்து தாம் பின்வாங்கப் போவதில்லை எனவும் ஜெரூஸலம் அல்-குத்ஸ் உயர் முஸ்லிம் மார்க்க அறிஞரான மொஹமட் ஹுஸைன் தெரிவித்துள்ளார்.
அல்-அக்ஸா பதற்ற நிலை தொடர்பாக கலந்துரையாடுவதற்காக ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை இன்று திங்கட்கிழமை கூடி ஆராயவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment