20 மில்லியன் நுளம்புகளை பறக்கவிடவுள்ள கூகுள்
இன்டர்நெட் உலகில்தான் கூகுள் ஏதாவது வித்தியாசமாக செய்து கொண்டிருக்கிறது என்றால், அறிவியல் தளத்திலும் பல விநோத முயற்சிகளை அவ்வப்போது எடுத்துக்கொண்டுதான் இருக்கிறது. அதன் தலைமை நிறுவனமான ஆல்ஃபாபெட் (Alphabet), தனது உயிர் அறிவியல் துறையான வெரிலி (Verily Life Science) உதவியுடன் 20 மில்லியன் கொசுக்களை கலிஃபோர்னியாவிலிருந்து பறக்கவிடப்போகிறது. சிட்டி ரோபோ போல் ரங்கூஸ்கி கொசுவைக் கண்டுபிடிக்கும் முயற்சியோ என்று ஆச்சர்யப்பட வேண்டாம். இது வளர்ந்து கொண்டே இருக்கும் ஒட்டுமொத்த கொசு இனத்தைக் கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சி!
கொசுவின் இனப்பெருக்கம் குறையும்
கொசுவின் இனப்பெருக்கத்தைக் குறைக்கவும், அதன் மூலமாக பரவும் உயிர்கொல்லி நோய்களான ஜிகா (Zika) மற்றும் டெங்குக் காய்ச்சலைக் கட்டுப்படுத்தவும் இந்த ஆராய்ச்சியைக் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது வெரிலி. ரோபோட் ஒன்றைத் தயாரித்து அதன் மூலம் ஆண் கொசுக்களை மலட்டுத் தன்மையுடன் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். முதற்கட்டமாக, 20 மில்லியன் கொசுக்களை கலிபோர்னியாவில் இருக்கும் ஃப்ரெஸ்னோ கவுண்டி என்ற இடத்தில் பறக்கவிட இருக்கிறார்கள். வாரத்திற்கு ஒன்றரை லட்சம் கொசுக்கள் என 20 வாரங்களுக்கு இதை செய்யவிருக்கிறார்கள். இதற்காகவே இரண்டு 300 ஏக்கர் நிலங்களைத் தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள்.
இந்த மலட்டுத் தன்மையுடைய கொசுக்கள் பெண் கொசுக்களுடன் சேரும் போது உருவாகும் கருமுட்டைகள் கொசுக்களை உருவாக்காது. இதன் மூலம், கொசுவின் இனப்பெருக்கத்தை வெகுவாகக் குறைக்க முடியும். 20 மில்லியன்களில் தொடங்கும் இந்த முயற்சி வெற்றிபெறும் பட்சத்தில் எண்ணிக்கைகளை மேலும் உயர்த்த முடிவு செய்துள்ளது வெரிலி.
தொழில்நுட்பத்திற்காக கைகோர்ப்பு
இந்த ஆராய்ச்சிக்காக வெரிலி நிறுவனம் கென்டக்கியை சேர்ந்த மஸ்கிட்டோ மேட் மற்றும் ஃப்ரஸ்னோவின் கொசு கட்டுப்பாட்டு நிறுவனம் ஆகியவற்றுடன் நட்பு கரம் நீட்டி இருக்கிறது. மஸ்கிட்டோ மேட் ஏற்கெனவே இது போன்ற ஆராய்ச்சிகள் பலவற்றை சிறிய அளவில் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், அப்போதில்லாத ஓர் உதவிக்கரம் அவர்களுக்கு இந்த முறை வெரிலியின் டெக்னாலஜி வடிவில் இருக்கிறது. இதனால் சிக்ஸர் பறக்கவிடும் கனவில் இருக்கிறது மஸ்கிட்டோ மேட்!
இது மரபணு மாற்றம் இல்லை, ஆபத்தும் இல்லை
மலட்டுத் தன்மையுடன் கொசுக்கள் என்றவுடன் ஏதோ மரபணு மாற்றம் என்று நினைத்துவிட வேண்டாம். பாக்டீரியாக்கள் உதவியுடன் இந்த மலட்டுத் தன்மையை உருவாக்குகிறார்கள். இதனால் பெண் கொசுக்கள், இவ்வகை ஆண் கொசுக்களுடன் இணைந்தாலும் இனப்பெருக்கம் நடைபெறாது. சாதாரண ஆண் கொசுக்களைப் போலவே இருந்தாலும், இனப்பெருக்கம் செய்ய முடியாததால் விரைவில் ஃப்ரஸ்னோவில் கொசுக்களின் எண்ணிக்கை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வெரிலி நிறுவனத்தில் பணியாற்றும் சீனியர் என்ஜினீயர் லினஸ் அப்ஸன் (Linus Upson) பேசுகையில், ”உலக மக்களுக்கு நிஜமாகவே உதவ வேண்டும் என்றால் இது போன்ற கொசுக்கள் பலவற்றை உருவாக்கி உலகம் முழுவதும் அனுப்ப வேண்டும். எல்லா வகை தட்பவெப்ப சூழ்நிலையிலும் இந்த கொசுக்களை வாழவைக்க முடியும். எல்லாவற்றிற்கும் மேலாக, இதன் விளைவு என்ன என்பதை குறைந்த செலவிலே நாம் கண்டறிய முடியும்.” என்றார். வெரிலியின் இந்த அசாத்திய முயற்சி வெற்றி பெற வாழ்த்துவோம்!
Post a Comment