'2025 ம் ஆண்டு வரையில், நல்லாட்சி முன்னெடுக்கப்படும்'
எதிர்வரும் 2025ம் ஆண்டு வரையில் நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சி முன்னெடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் 17 ஆளும் கட்சி அமைச்சர்கள் விலகப் போவதாக வெளியான தகவல்கள் குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நல்லாட்சி அரசாங்கம் எதிர்வரும் 2020ம் ஆண்டு வரையில் ஆட்சியை முன்னெடுக்கும். அதன் பின்னர் மீளவும் 2025ம் ஆண்டு வரையில் ஆட்சியைத் தொடரும் எனவும் கூறியுள்ளார்.
அரசாங்கம் படையினரை வேட்டையாடுவதாக கூட்டு எதிர்க்கட்சி சுமத்தி வரும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை.
மனிதப் படுகொலைகள், ஆட்கடத்தல்கள், கொலைகள், கப்பம் கோரல்கள் போன்றவற்றில் ஈடுபடுமாறு படைவீரர்களை கடந்த காலங்களில் சில அரசியல்வாதிகள் பிழையாக வழிநடத்தியுள்ளனர்.
கடந்த காலங்களில் நாடு முழுவதிலும் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் படைவீரர்கள் கைது செய்யப்பட்டனர்.
சில படைவீரர்கள் போதைப் பொருள் கடத்தியிருந்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் படைவீரர்கள் இல்லையா?
யாரேனும் ஓர் உயர் பாதுகாப்பு அதிகாரி கைது செய்யப்பட்ட உடன் அவரை படை வீரராக்கி அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்தப்படுகின்றது என்றும் தெரிவித்துள்ளார்.
சிங்கள, தமிழ், முஸ்லிம் இளைஞர்கள் கடத்திச் செல்லப்பட்டதாக கடற்படையின் முன்னாள் பேச்சாளருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கப்பம் செலுத்த முடியாத பெற்றோரின் பிள்ளைகள் கொல்லப்பட்டனர். படைவீரர் பதாகைகளை மாட்டிக் கொண்டு இனவாதத்தை தூண்டுவதற்கு இடமளிக்கப்படாது எனவும் அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
Post a Comment