அரசாங்கத்தில் இருந்து 18 பேர் விலகப் போகிறோம் - முஸ்லிம் சமய விவகார பிரதியமைச்சர் அறிவிப்பு
நல்லாட்சி அரசாங்கத்தின் உடன்படிக்கை காலம் முடிந்தவுடன் தான் அரசாங்கத்தில் இருந்தும், பிரதியமைச்சர் பதவியில் இருந்தும் விலகப் போவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான டுலிப் விஜேசேகர தெரிவித்துள்ளார்.
டுலிப் விஜேசேகர அரசாங்கத்தில் தபால் மற்றும் முஸ்லிம் சமய விவகார பிரதியமைச்சராக பதவி வகித்து வருகிறார்.
தனது இந்த முடிவு குறித்து ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த மேலும் 17 பேர் இந்த முடிவில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்களுக்கு ஏதேனும் ஒன்றை செய்ய வேண்டும் என்பதற்காக தான் நல்லாட்சி அரசாங்கத்தில் இணைந்து கொண்டதாகவும், இதுவரை அதனை செய்ய முடியாது போயுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தான் எப்போதும் கம்பஹா மக்களுடனேயே இருப்பதாகவும், நாட்டின் வளங்களை விற்பனை செய்வது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொள்கை அல்ல எனவும் கூறியுள்ளார்.
இதேவேளை, தொம்பே பிரதேசத்திற்கு குப்பைகள் கொண்டு வந்து கொட்டப்படுவதற்கு எதிரான போராட்டத்திலும் தபால் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பை மேற்கொண்ட போதும் தான் மக்களின் பக்கம் இருந்ததாகவும் பிரதியமைச்சர் மேலும் கூறியுள்ளார்.
Post a Comment