சட்டத்தை சில தமிழர்கள் கையில் எடுத்தபோதும், முஸ்லிம்கள் பொறுமை காத்தனர் - இம்ரான் Mp உருக்கம்
மூதூர் மல்லிகைத் தீவு சிறுமிகள் துஸ்பிரயோக விடயத்தில் தமிழ் - முஸ்லிம் உறவைக் குலைக்கும் வகையில் சிலர் செயல்பட்டமை கவலையைத் தருகின்றது என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக அவர் வெளியிடுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவ் அறிக்கையில் அவர், மேலும் தெரிவித்துள்ளதாவது:
மூதூர் மல்லிகைத் தீவு பாடசாலைச் சிறுமிகள் மூவர் துஸ்பிரயோகம் செய்யப்பட்டமை தொடர்பில் அப்பாடசாலையில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த முஸ்லிம்கள் சிலர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்தனர். அந்த முஸ்லிம்கள் தாம் இது விடயத்தில் தொடர்பில்லை என்று வாக்கு மூலம் அளித்திருந்த நிலையிலும் சந்தேக நபர்கள் என்ற வகையில் பொலிசார் சட்ட ரீதியான நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்தனர்.
இந்நிலையில் சமூக வலைத்தலங்களிலும் சில ஊடகங்களிலும் முஸ்லிம்கள் தான் இந்தக் குற்றத்தைப் புரிந்தார்கள் என்ற வகையில் முஸ்லிம்களின் மனத்தைப் புண்படுத்தும் வகையில் செய்திகள் பரப்பப் பட்டு வந்தன. கிழக்கு மாகாணம் தழுவிய வகையில் பாடசாலைப் பகிஸ்கரிப்புகள் இடம் பெற்று வந்தன.
(நேற்று) திங்கட்கிழமை மூதூர் நீதிமன்றத்தில் குற்றவாளிகளை அடையாளங்காணும் அடையாள அணி வகுப்பு இடம்பெற்ற போது இக்குற்றம் தொடர்பில் பாதிக்கப்பட்ட சிறுமிகள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட எவரையும் அடையாளம் காட்டவில்லை.
பொலிசார் இது தொடர்பான ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போதும் சந்தேக நபர்களின் புகைப்படத்தை பாதிக்கப்பட்ட சிறுமிகளிடம் காட்டிய போதும் அச்சிறுமிகள் அவர்களை அடையாளம் காட்டவில்லை. எனவே இந்த விடயத்தைச் சொல்லி உறவில் விரிசல் ஏற்படும் வகையில் செயற்பட வேண்டாம் நான் ஏற்கனவே ஊடகங்களில் கூறியிருந்தேன். இதற்காக சமூக வலைத்தளங்களும் சில அரசியல்வாதிகளும் எனக்கெதிராக கருத்துகளை வெளியிட்டு வந்தனர்.
இப்போது நீதிமன்ற நடவடிக்கை மூலமும் சந்தேக நபர்கள் தான் குற்றம் புரிந்தார்கள் என பாதிக்கப்பட்ட சிறுமிகள் உறுதிப்படுத்தவில்லை. எனவே நான் எனது முன்னைய ஊடக அறிக்கையில் குறிப்பிட்டதைப் போல இங்கு மறைகரம் ஒன்று செயற்பட்டிருப்பது ஊர்ஜிதமாகின்றது.
இதற்கிடையில் பொதுமக்களின் உணர்வுகளைத் தூண்டி விட்ட சிலரது நடவடிக்கைகள் தமிழ் - முஸ்லிம்களிடையே தேவையற்ற மனக்கசப்புகளைத் தோற்றுவித்துள்ளது. பயங்கரவாதத்துக்கு முன்னைய காலத்தைப் போன்று சமூக ஒற்றுமை வளர்ந்து வந்த நிலையில் இப்போது அதில் ஒரு தேக்க நிலையை உருவாக்கி விட்டது.
இந்தச் சம்பவத்தில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு உணவு கொண்டு வந்த ஒரு முஸ்லிம் நபர் தமிழ் இளைஞர்கள் சிலரால் கடுமையாகத் தாக்கப்பட்டு 3 மணி நேரத்திற்கும் மேலாக கோயில் வளாகமொன்றில் கட்டி வைக்கப்பட்டிருந்தார். சட்டத்தை கையில் எடுத்து செயல்ப்பட்ட ஒரு சில தமிழர்களின் இந்தச் செயற்பாட்டிற்காக முஸ்லிம்கள் எவரும் ஆர்ப்பாட்டம் செய்யவில்லை. தமிழர்களின் மனதைப் புண்படுத்தும் படி செயற்படவில்லை. புனித ரமழான் காலம் என்பதால் பொறுமை காத்தனர். இதற்காக சட்டம் தனது கடமையைச் செய்யட்டும் என அமைதியடைந்தனர்.
இந்நாட்டில் வாழ்கின்ற சிறுபான்மையினரான தமிழ் - முஸ்லிம் மக்களிடையே ஏற்பட்டிருந்த விரிசல்கள் தான் இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் பாரிய பின்னடைவுகளை ஏற்படுத்தியிருந்தது என்பது நாம் கடந்த காலத்தில் பட்ட அனுபவமாகும். எனவே உரிமைகளைப் பெறுவதற்காக இரு சமூகங்களும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டிய காலகட்டம் இது.
விடுதலைப் புலிகள் காலத்தில் ஏற்பட்டிருந்த தேவையற்ற இரு சமூக விரிசல்கள் இப்போது சீரடைந்து வரும் நிலையில் சிலரின் உணர்வுகளுக்கு அடிமைப்பட்டு மீண்டும் விரிசல்கள் ஏற்படும் வகையில் செயற்படுவதானது தீர்வு விடயத்தை இன்னும் பல ஆண்டுகளுக்கு பின்தள்ளிவிடும் என்பதில் சந்தேகமில்லை. இது நமது எதிர்கால சந்ததியினருக்கு நாம் செய்யும் பாரிய அநீதியாக வரலாற்றில் இடம் பிடித்து விடும்.
பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். உண்மையான குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இங்கு இனம், மதம் எதுவும் பார்க்கப்பட வேண்டிய தேவையில்லை. அதே போல சட்டத்தைக் கையிலெடுத்த சில இளைஞர்களால் தாக்கப்பட்ட அந்த முஸ்லிம் நபருக்கும் நியாயம் வழங்கப்பட வேண்டும். அதில் சம்பந்தப்பட்டவர்களும் தண்டிக்கப்பட வேண்டும். இவை சட்ட ரீதியான செயற்பாடுகள்.
இவற்றைக் குலைக்கும் வகையில் ஏதாவது தலையீடுகள் இருந்தால் அதற்கெதிராக அனைவரும் ஒன்றிணைந்து அழுத்தங்கள் கொடுக்க வேண்டும். இவை தான் சமூக ஒற்றுமையை உறுதிப்படுத்தும்.
எனவே எதிர்காலத்திலாவது சமூக உறவில் விரிசல் ஏற்படும் செயற்பாடுகளில் ஈடுபடுவது ஒழிக்கப்பட வேண்டும். சமூக ஒற்றுமைக்கான வழிவகைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும். அநீதியான சம்பவம் ஏதாவது நடந்தால் அதில் ஈடுபட்டவர் மட்டுமே குற்றவாளியாகப் பார்க்கப்பட வேண்டும். இதற்காக சமூகங்கள் புண்படும் வகையில் செயற்படுவது நிறுத்தப்பட வேண்டும். இந்த விடயத்தில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாகும் என்பதில் சந்தேகமில்லை.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்
This comment has been removed by the author.
ReplyDeleteநீதி கேட்டு நடை பெற்ற. ஆர்ப்பாடங்கள் அனைத்தும் குற்றாவாளிகளை கைது செய்யவும் தண்டிக்கவும் வலியுறுத்தி நடந்தவை.ஆனால் இந்த இனவாதி ஏதோ முஸ்லீம்களுக்கு எதிராக நடை பெற்றது போல பேசுகிறார்.
ReplyDeleteதிருடனுக்கு தேள் கொட்டியது போல துடிக்கிறார் இந்த நல்லீணக்க செம்மல்.
அவர் குற்றவாளி எந்த மதமாக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் ஆனால் பொதுமக்கள் சட்டத்தைக் கையிலெடுக்கக் கூடாதென்றுதானே கூறுகிறார். இதனை குற்றம் காண்பது உமது இனவாதச் சிந்தனைதான்.
ReplyDelete