அஸ்கிரிய பீடத்தின் சிவப்பு அறிக்கை, அரசாங்கத்திற்கு எதிரான சத்தியாக்கிரகமும் நாளை ஆரம்பம்
அஸ்கிரிய மகாநாயக்க தேரரின் சிவப்பு அறிக்கையில் குழப்பம் அடைந்துள்ள அரசாங்கம் பிக்குகளிடையே பிளவுகளை ஏற்படுத்த முயற்சிக்கின்றது. தாய் நாட்டை பாதுகாக்க அனைத்து பௌத்தர்களும் ஒன்றிணைந்து நாளை புதன் கிழமை இடம்பெறவுள்ள அரசாங்கத்திற்கு எதிரான சத்தியாக்கிரகத்தில் கலந்து கொள்ள வேண்டும் என பெங்கமுவே நாலக தேரர் தெரிவித்தார்.
இந்தியாவின் ' றோ ' உள்ளிட்ட சர்வதேச சூழ்ச்சியின் பின்னணியில் நாட்டிற்கு ஒவ்வாத ஆட்சி அமைந்துள்ளது. இதற்கு முடிவு கட்டுவதற்காகவே இந்த சத்தியாக்கிரகம் நடத்தப்படவுள்ளது. அரசியல்வாதிகள் கோவில்களில் தேங்காய் உடைப்பது போன்ற விடயம் இதுவல்ல. சுமார் 68 இலட்சம் பேர் பங்குபற்றும் சத்தியாக்கிரக போராட்டத்தை அநாவசியமாக கேலி செய்து சாபத்தை பெற்றுக் கொள்ள வேண்டாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
பொரளையில் அமைந்துள்ள ஸ்ரீ வஜிராஸ்ரம விகாரையில் இடம்பெற்ற விஷேட ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே பெங்கமுவே நாலக தேரர் மேற்கண்டவாறு கூறினார்.அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில் ,
நாட்டில் மக்களுக்கு ஒவ்வாத மோசமான ஆட்சி காணப்படும் போது அழிவுகள் ஏற்படுவது இயற்கையாகும். தற்போதைய நல்லாட்சி அரசாங்கம் ஆட்சி பீடம் ஏறிய பின்னர் நாட்டில் இயற்கை அழிவுகளுக்கு பஞ்சமே இல்லை. வரட்சி , வெள்ளம் , மண் சரிவு குப்பை மலைகள் என மக்களுக்கு அழிவுகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. ஆனால் மக்களின் அவலக் குரல்கள் செவிடன் காதில் ஊதிய சங்கைப் போன்றே அரசாங்கத்தில் காணப்படுகின்றன.
மறுபுறம் அரசாங்கம் பௌத்த மதத்தை சிதைக்கும் வகையிலும் பழிவாங்கும் அரசியலிலும் தொடர்ந்தும் ஈடுபடுகின்றது. குறிப்பாக தம்புள்ள விகாரை உண்டியல் மீது குறி வைத்து நல்லாட்சி அரசாங்கம் தற்போது செயற்படுகின்றது. கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தம்புள்ள விகாரை உண்டியல் விடயத்தில் தீவிரமாக செயற்படுகின்றார்.
எனவே அவரை அந்த பதவியில் இருந்து நீக்குவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேற்குலகத்தின் கைபொம்மையாக இலங்கை திகழவேண்டும் சதிகாரர்களின் நோக்கமாகும். எனவே தான் கடந்த ஆட்சியை கவிழ்ப்பதற்கு மிகவும் சூழ்ச்சிமமான முறையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.
இதன் பின்னணியில் இந்தியாவின் றோ அமைப்பும் மேலும் சில சர்வதேச சக்திகளும் காணப்பட்டன. அவர்கள் இன்று எமது தாய் நாட்டின் உரிமைகளை அழிப்பதற்கு சதி செய்கின்றனர்.நல்லாட்சி அரசாங்கம் இந்த விடயங்கள் தொடர்பில் கவனத்தில் கொள்ளாது , விகாரைகள் மற்றும் பிக்குகள் இடையே பிரிவினைவாதத்தை ஏற்படுத்தி வருகின்றது. குறிப்பாக அஸ்கிரிய மாநாயக்க தேரரின் சிவப்பு அறிக்கை அரசாங்கத்தை குழப்பம் அடையச் செய்துள்ளது.
எனவே அரசாங்கத்தின் தற்போதைய போக்கை அனுமதிக்க முடியாது. அனைத்து மக்களும் ஒன்றிணைந்து போராட வேண்டும். நாளை புதன் கிழமை நாடளாவிய ரீதியில் மாலை 5.48 சுப நேரத்தில் அரசாங்கத்திற்கு எதிரான சத்தியாக்கிரக போராட்டம் இடம்பெறவுள்ளது. மக்கள் அனைவரும் அருகில் உள்ள விகாரைகளிலோ அல்லது வீடுகளில் உள்ள புத்தர் சிலைகளுக்கு அருகிலோ விளக்கேற்றி நாசகரமான ஆட்சி வெளியேறி நாட்டில் சுபீட்சம் பிறக்க வேண்டும் என பிரார்த்திக்க வேண்டும்.
வருடத்தில் சிறந்த சுப நேரத்தில் இந்த சத்தியாக்கிரக போராட்டம் இடம்பெறுகின்றது. எனவே நிச்சயம் பலன் கிடைக்கும்.விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை கிளிநொச்சியில் ஆரம்பித்த போது இதே போன்று நாங்கள் நாடளாவிய ரீதியில் சத்தியாக்கிரக போராட்டத்தை முன்னெடுத்தோம் . அதன் பலனாக போரின் வெற்றி கிடைத்தது. எனவே இந்த சத்தியாக்கிரகத்தை அரசியல் நோக்கத்துடன் பார்த்து கேலி செய்ய வேண்டாம்.
அரசியல்வாதிகள் கோவில்களில் தேங்காய் உடைப்பது போன்ற விடயம் இதுவல்ல. அநாவசியமாக கேலி செய்து சாபத்தை பெற்றுக் கொள்ள வேண்டாம்.தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் சுமார் 68 இலட்சம் பௌத்தர்கள் நாளை புதன் கிழமை இந்த சத்தியாக்கிரக போராட்டத்தில் இணைந்து கொள்ள உள்ளனர் . கொழும்பில் தம்மாலோக விகாரையில் பிரதான நிகழ்வு இடம்பெறும் என தெரிவித்தார். விடிவெள்ளி
Post a Comment