டிரம்ப் - சாதிக் கான் மோதல் வலுக்கிறது
பிரித்தானியர்களின் நலன்களுக்கு முரணான கொள்கை கொண்ட அமெரிக்க ஜனாதிபதியின் வருகையை அமைச்சர்கள் ரத்து செய்ய வேண்டும் என லண்டன் மேயர் சாதிக் கான் கோரிக்கை விடுத்துள்ளார்.
பிரித்தானியர்களின் நலன்களுக்கு எதிராக செயல்படும் அமெரிக்க ஜனாதிபதிக்கு எதற்கு சிவப்பு கம்பள வரவேற்பு என ஆவேசப்பட்ட சாதிக் கான், அவரது அரசு முறை பயணத்தை அமைச்சர்கள் கூடி ரத்து செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
லண்டன் தாக்குதல் தொடர்பாக மேயர் சாதிக் கான் வெளியிட்ட கருத்துகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்து எதிர்கருத்து தெரிவித்திருந்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், மக்கள் அச்சப்பட வேண்டாம் என சாதிக் கான் சொல்வது வேடிக்கையாக உள்ளது என கிண்டல் செய்திருந்தார்.
ஆனால், சாதிக் கானின் நடவடிக்கைகளை பாராட்டிய பிரதமர் தெரேசா மே, தாக்குதல் சம்பவத்தை அடுத்து மேயரின் துரித நடவடிக்கைகள் அனைத்தும் பாராட்டப்பட வேண்டியவை எனவும், தாம் அதில் குறை ஏதும் காணவில்லை எனவும் தெரிவித்திருந்தார்.
இதனிடையே தனியார் செய்தி ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்த சாதிக் கான், பிரித்தானியர்களின் நலன்களில் அமெரிக்க ஜனாதிபதிக்கு எவ்வித அக்கறையும் இல்லை. அப்படியெனில் நாம் எதற்கு அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்க வேண்டும் என கேள்வி எழுப்பினார்.
மட்டுமல்ல டிரம்பின் கொள்கைகள் அனைத்தும் அமெரிக்காவை மட்டுமல்ல உலக நாடுகளையும் தவறான பாதைக்கு இட்டுச் செல்கிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வரும் அக்டோபர் மாதம் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தமது மனைவியுடன் அரசு முறை பயணமாக பிரித்தானியா வரவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment