Header Ads



பொறுமை காக்க கத்தார் உறுதி, குவைத்தின் தீவிர முயற்சிக்கு வெற்றி


அரபு உலகின் மிகப்பெரிய சக்திகள் இராஜதந்திர உறவுகளை துண்டித்த நிலையில் மத்தியஸ்த முயற்சிகளுக்கு தயாராக இருப்பதாக கட்டார் வெளியுறவு அமைச்சர் அறிவித்துள்ளார்.

பிராந்திய பதற்றத்தை தணிக்கும் குவைட்டின் முயற்சிக்காக இது தொடர்பில் கட்டார் ஆட்சியாளர் ஆற்றவிருந்த உரையும் தாமதிக்கப்பட்டுள்ளது.

கட்டார் எமீர் ஷெய்க் தமீம் பின் ஹமத் அல்தானி குவைட் அரச தலைவருடன் தொலைபேசியில் உரையாடினார். குவைட் தொடர்ந்து கட்டாருடன் இராஜதந்திர உறவை பேணி வருகிறது. இந்த தொலைபேசி உரையாடலுக்கு பின்னர் கட்டார் மக்களுக்கு ஆற்றவிருந்த உரையை ஷெய்க் தமீம் ஒத்திவைத்துள்ளார்.

அண்டை நாடுகளின் நடவடிக்கைகளுக்கு பதில் நடவடிக்கைகள் மேற்கொள்ளாமல் இருக்க கட்டார் தீர்மானித்துள்ளது.

தற்போதைய நெருக்கடியை தணிக்க குவைட்டின் ஷெய்க் சபாஹ் அல் அஹமது அல் ஜபர் அல் சபாஹ் சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதை கட்டார் விரும்புகிறது.

இந்நிலையில் குவைட் எமீர்  நேற்று சவூதி அரேபியாவை நோக்கி புறப்பட்டுச் சென்றார். அங்கு அவர் சவூதி மன்னர் சல்மானுடன் பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடத்த எதிர்பார்த்துள்ளார்.

2014 ஆம் ஆண்டில் வளைகுடா முறுகல் எற்பட்டபோதும் குவைட் எமீர் அதனை தணிப்பதில் தீர்க்கமான பங்கு வகித்தார். கட்டாரின் ஷெய்க் தமீம் அவரை மதிப்புக்குரியவராக கருதி வருகிறார். இதனால் அவரது முயற்சிக்கு மதிப்பளிக்கும் வகையில் பிரச்சினை குறித்து தெளிவான பார்வை ஒன்று கிடைக்கும் வரை ஷெய்க் தமீம் தனது உரையை ஒத்தி வைத்ததாக கட்டார் வெளியுறவு அமைச்சர் ஷெய்க் முஹமது, அல் ஜெஸீரா தொலைக்காட்சிக்கு குறிப்பிட்டார்.

எனினும் கட்டாருக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டிருக்கும் இந்த நடவடிக்கை முன்னெப்போதும் இல்லாத தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பதாக ஷெய்க் முஹமது குறிப்பிட்டார். என்றாலும் டோஹா பதில் நடவடிக்கை எடுக்காது என்று அவர் வலியுறுத்தினார்.

“சகோதர நாடுகளுக்கு இடையிலான இவ்வாறான பிளவுகள் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட வேண்டும் என்று கட்டார் நம்புகிறது” என்றும் அவர் குறிப்பிட்டார்.

குவைட்டின் எமீர் பிராந்திய பிரச்சினைகளில் பல தசாப்தங்களாக இராஜதந்திர மற்றும் மத்தியஸ்தம் விகித்த அனுபவம் கொண்டவராவார். 

இதேவேளை வளைகுடா பதற்றத்தை தணிக்க துருக்கி ஜனாதிபதி ரிசப் தையிப் எர்துவானும் முயன்று வருகிறார். இது பற்றி அவர் சவூதி அரேபியா, குவைட் மற்றும் கட்டார் தலைவர்களுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார். துருக்கி மோதல் தரப்புகளுடன் நெருக்கமான உறவை பேணி வருகிறது.

ஜனாதிபதியின் பேச்சாளர் இப்ராஹிம் கலின் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், நண்பர்கள் மற்றும் சகோதரர்களுக்கு இடையிலான பிரச்சினையை தீர்க்க ஜனாதிபதி எர்துவான் இராஜதந்திர முயற்சிகளை ஆரம்பித்துள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த 2014 ஆம் ஆண்டு இடம்பெற்ற எட்டு மாத இராஜதந்திர முறுகலை விடவும் தற்போதைய நடவடிக்கை கடுமையானதாக உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரும் கட்டார் தீவிரவாத குழுக்களுக்கு உதவுவதாக கூறி சவூதி அரேபியா, பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் டொஹாவில் உள்ள தனது தூதுவர்களை திரும்ப அழைத்துக் கொண்டன.

No comments

Powered by Blogger.