இலங்கையில் பள்ளிவாசல், முஸ்லிம் வர்த்தக நிலையங்களுக்கு எதிரான நடவடிக்கை கண்டிக்கத்தக்கது
-ARA.Fareel-
இலங்கையில் பள்ளிவாசல்களுக்கும் முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்களுக்கும் எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்த ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட 7 நாடுகளின் தூதுவர்கள் சட்டமும் ஒழுங்கும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டியதை வலியுறுத்தினர். குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்தனர்.
நேற்று மாலை 7 நாடுகளின் தூதுவர்களும் இராஜதந்திரிகளும் கொழும்பு தெவட்டகஹ பள்ளிவாசலுக்கு விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தனர்.
அத்துடன், மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மெளலானா, தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத்சாலி, ஆர்.ஆர்.ரி. அமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சில் உட்பட சிவில் சமூக பிரதிநிதிகளைச் சந்தித்து கலந்துரையாடினர். அச்சந்தர்ப்பத்திலே அவர்கள் இவ்வாறான கருத்தினை வெளியிட்டனர்.
இந்தச் சந்திப்பில் ஐரோப்பிய யூனியன், அவுஸ்திரேலியா, கனடா, நெதர்லாந்து, நோர்வே, கிழக்காசியா மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த தூதுவர்கள் கலந்து கொண்டனர்.
ஜனாதிபதியும் பிரதமரும் வெறுப்புணர்வை தூண்டும் செயல்களை கண்டித்துள்ளமையை தூதுவர்கள் வரவேற்றனர். தமது ஒருமைப்பாட்டினையும் தெரிவித்தனர்.
ஐரோப்பிய யூனியனின் தூதுவர் மார்குயு கருத்துத் தெரிவிக்கையில், தேசிய நல்லிணக்கமும் ஒருமைப்பாடும் பொறுமையும் முன்னெடுக்கப்பட்டு வரும் சந்தர்ப்பத்தில் இச் செயல்கள் முரண்பாடுகளை பரவச் செய்கின்றன.
இந்நிலையில் அரசாங்கமும் பொலிஸும் வெறுப்பு செயல்களுக்கு இடமளிக்கப்படமாட்டாது என்பதை உறுதி செய்வது முக்கியமானதாகும். பல்வேறு மதங்களைச் சேர்ந்த சமூகங்கள் தங்களுக்குள் புரிந்துணர்வினை வளர்ப்பதுடன் பரவிவரும் வெறுப்புணர்வுகளுக்கு எதிர்ப்புகளைத் தெரிவிக்க வேண்டும். இது முக்கியமானதாகும்.
சட்டம் ஒழுங்கினை பக்கசார்பாக நடத்த முற்பட கூடாது. அது ஜனநாயகத்திற்கு உரியது அல்ல. இலங்கையில் இன முரண்பாடுகள் தொடர்பில் மூவின மக்களுக்கும் நன்கு அனுபவம் உள்ளது. எனவே இந்த விடயத்தில் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
சந்திப்பின்போது சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் முஸ்லிம்களுக்கு எதிராகத் தொடரும் நடவடிக்கைகளைத் தெளிவுபடுத்தினர். ஆர்.ஆர்.ரி.அமைப்பின் தலைவர் சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் வெளிநாட்டுத் தூதுவர்களிடம் முஸ்லிம்களின் பிரச்சினைகள் தொடர்பான மகஜர் ஒன்றினையும் கையளித்தார். அத்துடன் இங்கு வந்த தூதுவர்கள் அனைவரும் கூட்டாக தமது கண்டனத்தை தெரிவித்தனர்.
Post a Comment