Header Ads



இஸ்லாமியர்கள் மீதுள்ள வெறுப்பால், நிகழ்த்தப்படும் குற்றங்கள் அதிகரிப்பு

எல்லா வகையான தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்தையும் ஒடுக்க தமது அரசு உறுதி பூண்டுள்ளதாக பிரிட்டன் பிரதமர் தெரீசா மே தெரிவித்துள்ளார்.

வடக்கு லண்டனில் உள்ள ஒரு மசூதியின் அருகே கூடியிருந்த இஸ்லாமியர்கள் மீது ஒரு வேன் மோதப்பட்ட சம்பவத்திற்குப் பின்னர் தெரீசா மே இதைக் கூறியுள்ளார். இச்சம்பவத்தில் ஒரு ஆண் உயிரிழந்தார்.

இஸ்லாமியர்கள் மீதான வெறுப்புணர்வு உள்ளிட்ட அனைத்து விதமான பயங்கரவாதம் மீதும் பல ஆண்டுகளாக அதிகப்படியான சகிப்புத்தன்மை காட்டப்பட்டதாக பிரதமர் தெரீசா மே கூறியுள்ளார்.

சாதாரண, அப்பாவி மக்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல், இந்த முறை புனித மாதத்தில் தங்கள் நோன்பை முடித்துக் கொண்டு மசூதியிலிருந்து செல்லும்போது பிரிட்டிஷ் முஸ்லிம்கள் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர் என்றார் பிரதமர்.

இது இஸ்லாமியர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் என்பது தெளிவாகத் தெரிகிறது என்று லண்டன் காவல் துறை தலைவர் கிரெஸ்ஸிடியா டிக் தெரிவித்தார்.

மசூதிகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் உறுதியாக அதிகரிக்கப்படும் என்று லண்டன் நகர மேயர் சாதிக் கானும் தெரிவித்துள்ளனர்.

கடந்த இரு வாரங்களுக்கு முன்பு லண்டன் பாலத்தில் நிகழ்ந்த ஜிஹாதி தாக்குதலுக்குப் பின்னர், இஸ்லாமியர்கள் மீதுள்ள வெறுப்பால் நிகழ்த்தப்படும் குற்றங்கள் அதிகரித்துள்ளதாகவும் மேயர் கூறியுள்ளார்.

காவல் அமைப்புகளால் முன்னர் அறியப்படாத அந்த வேன் ஓட்டுநர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். தான் எல்லா முஸ்லிம்களையும் கொல்ல விரும்புவதாக அவர் கோஷமிட்டதாகச் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.

இதனிடையே, தாக்குதலில் ஈடுபட்ட நபரின் பெயர், டெரன் ஆஸ்பர்ன் என்றும், கார்டிஃபைச் சேர்ந்த அவரது வயது 47 என்றும் பிபிசிக்கு தெரியவந்துள்ளது.

1 comment:

  1. இதை நாம் அவர் சான்ந்த மதத்துடன் ஒப்பிட முடியுமா.ஒரு முஸ்ஸீம் செய்தால் அது இஸ்லாமிய பயங்கர வாதமென கொக்கரிக்கும் குருடர்கள் இதை அவர் சார்ந்த மதத்துடன் ஒப்பிட்டால் ஏற்று கொள்வார்களா ?

    ReplyDelete

Powered by Blogger.