முஸ்லிம்கள் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க குழுவொன்றை நியமிக்குக - ஜனாதிபதியிடம் ரிஸ்வி முப்தி
-விடிவெள்ளி-
பொதுபலசேனா அமைப்பு முஸ்லிம்கள் மீது சுமத்தும் குற்றச்சாட்டுகள், சந்தேகங்கள் என்பவற்றை ஆராய்ந்து தீர்வுகளை சிபார்சு செய்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுயாதீன குழுவொன்றினை நியமிக்க வேண்டும் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.ரிஸ்வி முப்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முஸ்லிம்களுக்கு எதிரான தங்களது முறைப்பாடுகளையும் சந்தேகங்களையும் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்த்துக்கொள்ளத் தயார் என்று பொதுபலசேனாவின் செயலாளர் ஞானசாரதேரர் அழைப்பு விடுத்திருக்கும் நிலையில் அது தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலே உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், ‘
தற்போது நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் முஸ்லிம் சமூகம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருப்பதில் பயன் ஏதும் ஏற்படப்போவதில்லை. பொதுபலசேனா அமைப்பு முஸ்லிம்கள் மீதான தமது குற்றச்சாட்டுகள், சந்தேகங்கள் என்பவற்றை ஜனாதிபதியிடம் முறையிடட்டும். ஜனாதிபதி இதற்கென விஷேட சுயாதீன கமிட்டி ஒன்றினை நியமித்து அது தொடர்பில் ஆராய்ந்துஒரு தீர்க்கமான தீர்மானத்தை எடுக்கட்டும்.
அரசாங்கமும் ஜனாதிபதியும் இந்நாட்டின் பெரும்பான்மை மக்களுக்கும் சிறுபான்மை மக்களுக்கும் அநீதிகள் ஏற்படுவதை ஒருபோதும் விரும்பமாட்டார்கள். எனவே ஜனாதிபதி நியமிக்கும் கமிட்டியின் தீர்மானத்தை அரசாங்கம் சட்ட ரீதியாக அமுல் நடத்தட்டும். அதனை முஸ்லிம் சமூகம் ஏற்றுக்கொள்ளத் தயாராகவே உள்ளது.
கடந்த காலங்களில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை கலந்து கொண்ட ஜனாதிபதியுடனான சந்திப்புகளிலும், சர்வமத தலைவர்கள் கலந்து கொண்ட கலந்துரையாடல்களிலும் நாம் இவ்விடயத்தை தெளிவாக எடுத்து விளக்கியிருக்கிறோம்.
பேச்சுவார்த்தைகள் மூலம் இணக்கம் காணுவதை விட ஜனாதிபதியூடாக சட்டரீதியாக பிரச்சினைகளுக்குத் தீர்வு பெற்றுக் கொள்வதே நம்மை பயக்கும் என உலமா சபை கருதுகிறது.
எனவே, பொதுபலசேனா அமைப்பும் ஏனைய அமைப்புகளும் முஸ்லிம் சமூகத்தின் மீது சுமத்தும் குற்றச்சாட்டுகளும் சந்தேகங்களும் ஜனாதிபதியிடமே முன்வைக்கப்படவேண்டும். பிரச்சினைகளுக்கு நாட்டின் தலைவர் என்ற வகையில் ஜனாதிபதியே தீர்வுகள் பெற்றுத்தர வேண்டும் என்றார்.
Post a Comment