இலங்கை - கட்டார் விமான சேவைகளில் மாற்றமில்லை
கட்டாருக்கான ஶ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் விமான சேவைகள் வழமைபோன்று நடைபெறும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள நிலைமைகள் குறித்தும் தொடர்ந்தும் அவதானித்து வருவதாக, ஶ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியம், சவூதி அரேபியா, எகிப்து, பஹ்ரைன் உள்ளிட்ட மத்திய கிழக்கின் சில நாடுகள் கட்டாருடனான இராஜதந்திர உறவுகளை துண்டிப்பதாக அறிவித்துள்ளன என, நேற்றையதினம் செய்திகள் வௌியாகின.
தீவிரவாதத்திற்கு கட்டார் ஆதரவளிப்பதாக குற்றம்சாட்டியே அவர்கள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர் என வௌிநாட்டு ஊடகச் செய்திகள் குறிப்பிட்டுள்ளன.
இதனையடுத்து, அந்தநாட்டுக்கான விமான சேவைகளை இடைநிறுத்துவதாக எமிரேட், பிளை துபாய், எதிஹாத் எயார்லைன்ஸ் ஆகியன அறிவித்தன.
இந்தநிலையில், இலங்கையில் இருந்து கட்டாருக்கான விமான சேவைகள் வழமைபோன்று இடம்பெறும் என தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
இதுஇவ்வாறு இருக்க, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள வங்கிகளில், கட்டார் ரியாலை இலங்கை ரூபாயாக மாற்றித் தர மறுப்பதாக, அந்த நாட்டில் இருந்து வரும் பயணிகள் முறையிட்டிருந்தனர்.
எனினும், இலங்கையிலுள்ள எந்த வங்கிக்கும் அவ்வாறான அறிவித்தலை வழங்கவில்லை என, மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.
Post a Comment