பாலியல் வன்முறைக்குள்ளானதாக கூறப்படும் மாணவிகள், இன்றும் சந்தேக நபர்களை அடையாளம் காட்டவில்லை
இலங்கையில் திருகோணமலை மாவட்டம் மூதூர் பிரதேசத்தில் மூன்று பள்ளி மாணவிகள் பாலியல் வன்முறைக்குள்ளானதாக கூறப்படும் சம்பவம் தொடர்பான அடையாள அணிவகுப்பில் பாதிக்கப்பட்ட மாணவிகளினால் சந்தேக நபர்கள் அடையாளம் காணப்படவில்லை.
அடையாள அணிவகுப்பில் நிறுத்தப்பட்டிருந்த சந்தேக நபர்களை மாணவிகளினால் அடையாளம் காட்ட முடியவில்லை
கடந்த 29ம் தேதி அந்த பிரதேசத்திலுள்ள அரசு தமிழ் பள்ளிக்கூடம் ஒன்றில் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் சைவ சமய வகுப்புக்கு சென்றிருந்த 6 முதல் 8 வயது வரையான மூன்று மாணவியர் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக, அந்த பள்ளிக்கூட கட்டுமான தொழிலாளர்கள் உள்ளிட்ட அயல் பிரதேச நபர்கள் 5 பேரை, சந்தேகத்தின் பேரில் போலீஸார் கைது செய்துள்ளனர்.
இன்று திங்கட்கிழமை மூதூர் மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நீதிபதி ஐ..எம். ரிஸ்வான் முன்னிலையில் நடைபெற்ற அடையாள அணிவகுப்பில் ஐந்து சந்தேக நபர்களும் நிறுத்தப்பட்டிருந்தனர்.
அடையாள அணிவகுப்புக்கு வருகை தந்திருந்த பாதிக்கப்பட்ட மாணவிகளால் சந்தேக நபர்கள் எவரையும் அடையாளம் காட்ட முடியவில்லை.
அடையாள அணிவகுப்புக்கு பின்னர் போலீஸாரால் மன்றில் ஆஜர்படுத்தப்பட்ட அந்த சந்தேக நபர்கள், நீதிமன்ற உத்தரவின்பேரில் எதிர்வரும் 12ம் தேதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, இந்த சம்பவத்தை கண்டித்தும், பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு நீதிக் கோரியும் இன்று திங்கட்கிழமையும் அந்த பிரதேசத்தில் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன.
மல்லிகைத்தீவு மற்றும் றால் குழி போன்ற இடங்களில் நடைபெற்ற ஆர்பாட்டங்களிலும் கவன ஈர்ப்பு போராட்டங்களிலும் மாணவர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
திருகோணமலை : பாலியல் வன்முறைக்குள்ளான மாணவிகளுக்கு நீதி கோரி தொடரும் போராட்டம்
மல்லிகைத்தீவு சந்தியில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் போக்குவரத்துக்கு தடைகளை ஏற்படுத்தியமையால் மட்டக்களப்பு - திருகோணமலை சாலையில் ஓரிரு மணிநேரம் போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டன.
பாதிப்புக்குள்ளான மாணவிகளுக்கு நீதிக் கோரி கிழக்கு மாகாணத்தில் ஒரு வார காலமாக மாணவர்கள் மற்றும் சிவில் அமைப்புகள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment