வட்ஸ் அப்பில் இப்படியும் ஏமாற்றுகிறார்கள்..!
வட்ஸ் அப் தளத்தினூடாக தனது தோழியின் புகைப்படத்தை வைத்து நூதனமான முறையில் பண மோசடி செய்த பெண்னையும் அவருக்கு உடந்தையாக இருந்த கணவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியைச்சேர்ந்த தயாநிதி என்பவர் வாசனை பொருட்கள் வியாபாரம் செய்து வருகின்றார்.
இவரது வீட்டில், ராயப்பேட்டை சாந்தா சாஹிப் தெருவைச்சேர்ந்த யாஸ்மின் என்பவர் குடியிருந்துள்ளார்.
இந்நிலையில் யாஸ்மின், தயாநிதியுடனான பழக்கத்தை பயன்படுத்தி தனது தோழி பிரியா என்பவரது தாயார் புற்றுநோயால் அவதிபடுவதாகவும், அதற்கு பண உதவி தேவைப் படுவதாகவும் தயாநிதியை அணுகியுள்ளார்.
அதேநேரம் போலியான வட்ஸ் அப் கணக்கிணை ஏற்படுத்தி தனது தோழியான ரேவதி என்பவரது படத்தை DP-யாக வைத்து தயாநிதியிடம் நட்பாக பழகிய யாஸ்மின் பின்னர் காதலிப்பதாகக் கூறியுள்ளார்.
தயாநிதியிடம் தொடர்ந்து வட்ஸ் அப் மூலம் தொடர்பு கொண்ட யாஸ்மின், அவரிடமிருந்து சிறிது சிறிதாக 7 லட்ச ரூபா வரை பெற்றுக்கொண்டுள்ளார்.
ஒரு கட்டத்தில் தயாநிதி கொடுத்த பணத்தை திரும்பத்தருமாறு யாஸ்மினை கேட்க, தனது தோழி ரேவதியின் காசோலை புத்தகத்தைத் திருடி, அதில் கையெழுத்திட்டு தயாநிதிக்கு கொடுத்துள்ளார்.
சந்தேகமடைந்த தயாநிதி இது குறித்து வங்கியில் விசாரித்தபோது அது அவளது தோழி ரேவதியுடைய காசோலை என்பது தெரியவந்தது.
இதனையடுத்து ரேவதியின் முகவரிக்கு சென்று பார்த்தபோது தம்மிடம் வட்ஸ் அப்பில் தொடர்பில் இருந்த பெண்ணின் DP ரேவதியின் படம் என்பது தெரிய வந்த நிலையில் நடந்த சம்பவங்கள் குறித்து தயாநிதி ரேவதியிடம் கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து குறித்த சம்பவம் தொடர்பில் ரேவதி, தயாநிதி ஆகிய இருவரும் ராயப்பேட்டை மற்றும் ஐஸ் ஹவுஸ் காவல் நிலையங்களில் புகார்செய்துள்ளனர்.
குறித்த புகாரின் அடிப்படையில் ராயப்பேட்டை பொலிசார், யாஸ்மின் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது கணவர் இப்ராஹிம் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர்.
மேலும் கைது செய்யப்பட்ட இருவரிடமும் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், யாஸ்மின் இது போன்று பல ஆண்களை வட்ஸ் எப் மூலம் ஏமாற்றியிருப்பது தெரியவந்துள்ளது.
இதேவேளை யாஸ்மின் மற்றும் இப்ராஹிமை பொலிஸார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் நீதிபதியின் உத்தரவின்பேரில் அவர்களை புழல் சிறையில் அடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சரியான தண்டனை
ReplyDelete