Header Ads



கோயிலில் இப்தார், தொழுகையும் நடந்தது - வெடித்தது சர்ச்சை

இப்தார் விருந்து கொடுத்தது இந்து தர்மப்படி தவறல்ல என்றும் இந்த விவகாரத்திற்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துவது தேவை இல்லாதது என்றும் பெஜாவர் மடாதிபதி விசுவேஸ்வர தீர்த்த சுவாமி தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலம் உடுப்பி டவுனில் கிருஷ்ணன் கோவில் உள்ளது. இந்த கோவில் வளாகத்தில் ஸ்ரீகிருஷ்ணன் மடம் உள்ளது. இந்த நிலையில் கடந்த 23–ந்திகதி பெஜாவர் மடாதிபதி விசுவேஸ்வர தீர்த்த சுவாமி தலைமையில் கிருஷ்ணன் கோவில் வளாகத்தில் இப்தார் விருந்து நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டிய நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முஸ்லிம்கள், சிறப்பு தொழுகை நடத்தினர். இந்த விருந்தில், முஸ்லிம்களுக்கு வாழைப்பழம், முந்திரிபருப்பு, அப்பிள், தர்ப்பூசணி உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

இது கர்நாடகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு ஸ்ரீராம் சேனை கர்நாடக மாநில தலைவர் முத்தாலிக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தை கண்டித்து எதிர்வரும் 2ஆம் திகதி மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார். அதே வேளையில் கோவில் வளாகத்தில் நடந்த இப்தார் நோன்பு விருந்தில் தவறு இல்லை என்றும், பெஜாவர் மடாதிபதிக்கு ஆதரவு தெரிவித்தும் வருகிற 2–ந்திகதி போராட்டம் நடத்தப்படும் என்று உடுப்பி மாவட்ட இளைஞர் காங்கிரசார் அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை பெஜாவர் மடாதிபதி விசுவேஸ்வர தீர்த்த சுவாமி உடுப்பியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

உடுப்பி கிருஷ்ணன் கோவில் வளாகத்தில் இப்தார் நோன்பு விருந்து கொடுத்தது பெரிய விவாதம் ஆகியுள்ளது.

முஸ்லிம்கள் மத்துவாச்சார்யா காலம் முதல் இன்று வரை இந்துக்களுடன் ஒற்றுமையாக உள்ளனர். மத்துவாச்சார்யா மடம் கட்ட முஸ்லிமை சேர்ந்த ராஜாக்கள் நிலம் வழங்கியுள்ளனர். ராகவேந்திரர் ஸ்ரீக்கும், மத்துவாச்சார்யாவுக்கும் இஸ்லாமிய மக்களுடன் நல்ல நட்பு இருந்துள்ளது.

இப்தார் விருந்தின் போது இஸ்லாமிய நண்பர்களுக்கு பழங்கள் வழங்கினேன். அவர்கள் விருந்து சாப்பிடுவதற்கு முன்பு தொழுகை நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

அதனால் பொதுமக்கள் அன்னதான கூடத்தில் தொழுகை நடத்துமாறு கூறிவிட்டு நான் புறப்பட்டு சென்றுவிட்டேன். அவர்களை தொழுகை நடத்தக் கூடாது என்று கூறினால் அவமதிப்பு செய்ததாகி விடும். அதனால் தொழுகை நடத்த அனுமதி வழங்கினேன். இப்தார் விருந்து வழங்கியதை சிலர் பல வகைகளில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார்கள்.

என்னை பொறுத்தவரை இந்த இப்தார் விருந்து நடத்தியது சரியே. இந்து தர்மத்தின் படி பசி என்று வந்தவர்களுக்கு சாதி, மதம் பார்க்காமல் அன்னமிடுவது உகந்தது ஆகும். எனவே இப்தார் விருந்து கொடுத்தது இந்து தர்மப்படி தவறல்ல. பொதுமக்கள் தினமும் சாப்பிடும் இடத்தில் முஸ்லிம்கள் தொழுகை நடத்தினர். இதனால் இந்து மதத்திற்கு பெரிய அவமானம் கிடையாது.

முஸ்லிம்களுக்கு இப்தார் விருந்து வழங்கியதும், தொழுகை நடத்தவிட்டதும் தவறு என்று சிலர் கூறுகிறார்கள். இதில் சர்ச்சையை கிளப்புவது தேவையில்லாதது.

இந்த சம்பவத்திற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துவதாக கூறியுள்ளனர். அதே வேளையில் ஆதரவு தெரிவித்து சிலரும் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் எதிர்ப்பு மற்றும் ஆதரவு போராட்டங்கள் தேவை இல்லாதது. பொதுமக்கள் ஸ்ரீகிருஷ்ணன் மட வழக்கப்படி இந்து தர்மத்திற்கு எதிரான செயலை செய்யவில்லை. ஆண்டாண்டு காலமாக முஸ்லிம் மக்கள் இங்கு வந்து செல்கிறார்கள். இதில் தவறு ஏதும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார். 

No comments

Powered by Blogger.