ஞானசார எனும், பிச்சைப் பாத்திரம் ஏந்தும் அரசு
-ஆதம் லெவ்வை நௌபீர்-
அண்மைக் காலம் முதல் ஆழும் அரசுக்கு தேர்தல் நடத்த வேண்டும் என்ற அழுத்தம் அதிகரித்து வருகிறது. இது தேசிய அரசாம். ஐ.தே. கட்சி ஒரு பக்கம், ஸ்ரீ.ல.சு. கட்சி மறு பக்கம் என கைறு திரிக்கும் ஆட்சியே நடக்கிறது. உள் நாட்டில் மயிந்தையார் அணியும், வெளிநாட்டு உதவி வழங்கும் சக்திகளும் தேர்தல் பற்றி கதைக்க ஆரம்பித்துள்ளன.
அரசு வெறும் கோசங்களும், குற்றச் சாட்டுக்களாலும் நிறைந்த வெற்றுப் பாத்திரமாகவே ஓடிக்கொண்டிருக்கிறது. பௌத்த பெரும்பான்மை அடியோடு இல்லாமல் போய்விட்டதாகவே அரச தரப்பு உணர்கிறார்கள். வடக்கில் காணி விடுவிப்பு, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல், தமிழ் கைதிகளை விடுவித்தல் எனப் பல நல்லிணக்க செயற்பாடுகளால் தென்னிலங்கையைக் குழப்பி வைத்திருக்கும் மயிந்தர் அணி.
அரசுக்கு இந்தத் தருவாயில் கைகொடுத்த உத்தமரே ஞானசார. இவர் முன்னைய அரசின் தயாரிப்பு என்பதில் சந்தேகம் இல்லை. கோத்தாவோடும், பெரும் புள்ளிகளோடும் தொடர்பில் இருந்தவர். அதேபோல இன்றைய அரசிலும் முக்கிய அதிகாரங்களோடு தொடர்பானார். ஞானத்துக்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உள்ளது. அதற்கும் முஸ்லிம் மக்களுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. அது பிரபல ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடயின் மனைவியை அச்சுறுத்திய வழக்கும், மேலும் ஹோமாகம நீதிபதியை பென்ஞ்சிலே வைத்து அச்சுறுத்தியதுமான வழக்குகள். இந்த வழக்கில் ஞானம் உள்ளே போவது உறுதி. ஆதலால் அவர் ஒரு புதிய அவதாரம் எடுத்தார். தான் ஒரு பௌத்த மதக் காவலன் என்றும் அந்தக் காவல் முஸ்லிம்களிடமிருந்து பௌத்தத்தைக் காப்பதே என்றும் பொய்யாக ஒரு பிரமையை பௌத்த மக்கள் மனதில் தோற்றுவித்தார். அதை மிக அண்மைக் காலமாக மே தின ஊர்வலங்களின் பின்னர் முடுக்கிவிடலானார்.
பிரபாகரனைக் கொலை செய்யும் போது மயிந்தையரே ஆட்சியில் இருந்தாலும் புலிகளின் யுத்த செயற்பாடுகளை உடைத்தெடுத்தவர் றணிலே. அதைக் கருணாவைப் பிரித்து அவர் சாதித்தார். ஆனால் அதே கருணா இலங்கை அரசு மயிந்தைக்கு கைமாறியதும் ஓடிப் போய் அமைச்சராகி, சிறிலங்கா சு.கட்சியின் உபதலைவராகி மயிந்தையோடு ஒட்டிக் கொண்டார் அல்லவா? அதே சீன்தான் ஞானத்திக்கும் நடைபெறுகிறது. ஞானம் கோத்தாவோடே இருந்தார். ஆனால் அரசு கைமாறியதும், இங்கே முக்கிய புள்ளிகளோடு ஒட்டிக் கொண்டார். அது ஒன்றும் ஆச்சரியமில்லை. அதுதான் உலக நியதியும் கூட. மேலும் ஞானம் முஸ்லிம் எதிர்ப்பு பூதமாக வெளியாகியுள்ளதால் அவருக்கு வேறுபல மொஷாட் போன்ற தொடர்பும் ஏற்பட்டே இருக்கும் என்பதும் இயல்பானதே.
பௌத்த மதக் காவலன் மயிந்தர் என்றும், அவரை அனியாயமாக வீட்டுக்கு அனுப்பிவிட்டோம். இந்த சோனியோடும், தெமல கொட்டியாவோடும் சேர்ந்து நாம் மைத்திரியைக் கொண்டுவந்தது தவறான செயலே என்ற எண்ணம் இன்று சிங்கள மக்கள் மத்தியிலே பரவி வருகின்றது. அந்த எண்ணத்தை அரசின் வெறும் வாய்ப் பேச்சும், பொய்யான குற்றச்சாட்டுக்களும், மயிந்தையின் குடும்பத்தைப் பலிதீர்க்கும் செயற்பாடுகளும் மேலும் வலுவூட்டுகிறது.
இப்போது சிங்கள மக்களுக்கு நாங்கள் மயிந்தையை விடவும் பயங்கரமான பௌத்த தீவிர அரசுதான் என்றும், முஸ்லிம் எதிர்ப்பாளர்கள் தான் என்றும் காட்ட வேண்டிய தேவை ஆழும் அரசுக்கு உருவாகியுள்ளது. அதற்கு வேறு எங்கே போகலாம். புதிதாக யாரை உருவாக்கலாம்? இலகுவான ஞானம் உள்ளாரே அவரையே பாவிப்போம். அதற்கு இரண்டு அமைச்சர்களை வைத்தே காய்களை உருட்டலாம் என்று இறங்கியது அரசு. இரகசியமாக அரசு செயலில் உள்ளது. ஆனால் சங்கடமும் உள்ளது. யாரை நம்பினாலும் இந்த ஞானத்தை யார் நம்புவார். இவர் ஒன்றைச் சொல்லிக் கொடுத்தால் அதைப் பன்மடங்கு அதிகரித்தல்லவா செய்து மாட்டிக் கொள்பவர். அதுவே இன்று அரசைத் தர்மசங்கட நிலைக்குக் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. இறுதியில் ஞானம் தலைமறைவு என்றொரு நாடகத்தை அரங்கேற்றவேண்டிய துர்ப்பாக்குய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது அரசு. அன்று கோத்தா சிறுபான்மை வாக்கே வேண்டாம் என்றே ஆடினார். இவர்களுக்கு அவ்வாறு அல்லாமல் சிறுபான்மை வாக்கும் வேண்டும், பெரும்பான்மை வாக்கும் வேண்டும் என்ற இரு தலைக்பொள்ளி எறும்பு நிலை உள்ளதால் அரசால் தாக்குப் பிடிக்க முடியாமல் திக்கு முக்காடுகிறது. ஞானம் விடயத்தில் அரசு கண்களை மூடிக்கொண்டு பால் குடிக்கும் பூனை என்ற நிலைக்கு வந்து விட்டது.
நாம் ஞானத்தொடு கோபங் கொள்ளவும், அவரை ஏசவும் தேவை இல்லை. காரணம் அவர் வெறும் 'அம்பு' ஆனால் அதை எய்தவனே எமக்குத் தேவை. எய்தவன் வேறு யாருமல்ல நாம் எல்லோரும் வாக்களித்து கூட்டி வந்து கதிரையிலே அமர்த்திய தலைவனே.
நீண்டகாலமாக இந்த நாட்டிலே ஒரு மரபு இருக்கிறது. அது தேர்தலில் வாக்களித்த மக்கள் பின்னர் அவர்களால் தெரிவு செய்யப்பட்ட தலைவனை நினைத்து மனம் வருந்தியதே மரபாக உள்ளது. அந்த மரபை நமது தானைத் தளபதி பொது வேட்பாளர் மைத்திரியும் எமக்குச் சொல்லித் தராவிட்டால் அவர் ஒரு தேர்தலில் தெரிவு பெற்ற தலைவன் என்ற மரபை உடைத்து விடுவார் அல்லவா? நீதியை நிலை நாட்ட ஞானத்தை அடைப்பதா? தேர்தலை நிலை நாட்ட ஞானத்தை ஒழித்து வைப்பதா எதைச் செய்வது? பொறுத்திருந்து பார்ப்போம்.
முஸ்லிம்களுக்கு எதிராக 20 க்கு மேற்பட்ட தீ வைப்புச் சம்பவங்கள் இந்த நல்லாட்சியிலே நடந்தேறியுள்ளன. குறைந்தது ஒரு ஜனாதிபதி என்ற பொதுத் தன்மையின் அடிப்படையிலே வெறும் TV யிலே தோன்றி முஸ்லிம்கள் சார்பாகப் பேசாவிட்டாலும், சட்டம், ஒழுங்கு பற்றியும் அதை மீற வேண்டாம், என்பது பற்றியாவது இவர் பேசி நிலைமையைக் கட்டுப்படுத்தி இருக்கலாம். அதை அவர் செய்யத் தவறிவிட்டார். அதனாலோ என்னவோ தெரியாது இயற்கை சீற்றம் கொண்டு ஓரளவு நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர தேர்ந்தது என்று எண்ணத் தோன்றுகிறது.
இரவைக்கு எந்தப் பள்ளிவாசலோ அல்லது எந்த முஸ்லிமின் வர்த்தக நிலையமோ உடைபடும் என்ற எதிர்பார்ப்போடே தூங்கச் செல்கிறோம்.
Post a Comment