Header Ads



மாட்டுக்கு பாதுகாப்பு, மகளிர் மீது பாலியல் தாக்குதல் - வைரலாகும் புகைப்படம்

இந்தியாவில், மாடுகளைக் காட்டிலும் பெண்களுக்கு முக்கியத்துவம் குறைந்துவிட்டதா என்ற கேள்வியை எழுப்பும் புகைப்பட விழிப்புணர்வு பிரசாரம் வைரலாகி வருகிறது.

23 வயது புகைப்படக் கலைஞரின் அந்த பிரசாரம் தேசியவாதிகளின் கோபத்திற்கும் ஆளாகியுள்ளது.

எனது நாட்டில் மாடுகளுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம்கூட பெண்களுக்கு அளிக்கப்படவில்லை என்பது எனக்கு அமைதியின்மையை ஏற்படுத்துகிறது, இந்துக்களால் புனிதமாக கருதப்படும் பசு மாட்டை காட்டிலும் பாலியல் வல்லுறவு அல்லது துன்புறுத்தலுக்கு ஆளாகும் பெண்களுக்கான நீதி தாமதமாகவே கிடைக்கிறது என பிபிசியிடம் கூறுகிறார் டெல்லியில் வசிக்கும் புகைப்படக் கலைஞரான சுஜட்ரோ கோஷ்

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்த செய்தியை நம் நாட்டில் அதிகமாக பார்க்கலாம், மேலும் அரசின் புள்ளி விவரத்தின்படி இந்தியாவில் ஒவ்வொரு 15 நிமிடத்திற்கும் ஒரு பெண் பாலியல் வல்லுறவிற்கு ஆளாகிறார்.

"இம்மாதிரியான வழக்கில் குற்றம் புரிந்தவர்களை தண்டிக்க பல நாட்களாக நீதிமன்றத்தில் அந்த வழக்கு நிலுவையில் இருக்கும், ஆனால் ஒரு பசு வதை செய்யப்பட்டால், அதைச் செய்தவர்கள் என்று சந்தேகிக்கப்பட்டால் அவர்கள் இந்துத்துவா குழுக்களால் உடனே கொல்லப்படுகிறார்கள் அல்லது துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள்." என்கிறார் கோஷ்.

2014ஆம் ஆண்டு நரேந்திர மோதி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு அதிகரித்துள்ள பசு கண்காணிப்பு குழுக்களுக்கு எதிரான தனது வழியிலான போராட்டம் இது என்று கூறுகிறார் கோஷ்.
தாத்ரியில் முஸ்லிம் நபர் ஒருவர் மாட்டிறைச்சி வைத்திருப்பதாக சந்தேகித்து இந்துக் குழுக்களால் கொல்லப்பட்ட சம்பவமும் அதே போன்ற பிற சம்பவங்களும் தன்னை கவலையடைச் செய்தது என்றும் கூறுகிறார்.
இந்தியாவில் சமீப காலமாக, சாதுவான விலங்காக கருதப்படும் பசுக்கள் முக்கியமாக கருதப்பட்டு வருகிறது.

பசு கண்காணிப்பு குழுக்களால் முஸ்லிம், கிறித்துவர்கள் மற்றும் தலித் மக்கள் வன்முறையை சந்திக்கின்றனர். இரண்டு வருட காலமாக, பசுக்களின் பெயரில் சுமார் டஜன் கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்.

அதுவும் பல ஆதாரமற்ற வதந்திகளால் அவர்கள் தாக்கப்படுகின்றனர். மேலும் முஸ்லிம் மக்கள் பசுக்களை பாலுக்காக கொண்டு செல்லும்போதும் தாக்கப்படுகின்றனர்.

No comments

Powered by Blogger.