அரசாங்கம் தன்னைத்தானே, நொந்துகொள்ளும் காலம் தொலைவில் இல்லை..!
இவ்வருட முடிவுக்குள் தேர்தல்கள் பலவற்றை இந்த அரசாங்கம் சந்தித்தே ஆக வேண்டும் என்பது களநிலவரங்கள் மூலம் தெளிவாக விளங்க முடியுமான ஓர் உண்மையாகும். அரசாங்கம் தேர்தலை பல்வேறு காரணங்களைக் காட்டி ஒத்திப் போட்டு வருவதாக மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிர்க் கட்சி தொடர்ந்தும் குற்றம்சாட்டி வருகின்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த வாரம் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள், எம்.பி.க்கள், மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள், கட்சியின் அமைப்பாளர் ஆகியோருக்கு தேர்தலுக்கு தயாராகுமாறும், இவ்வருட இறுதிக்குள் தேர்தல் வரும் எனவும் தெரிவித்திருந்ததாக அக்கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான துமிந்த திஸாநாயக்க அறிவித்திருந்தார்.
அத்துடன், உள்ளுராட்சி சபைத் தேர்தலுக்கான அமைச்சரவையின் அனுமதி விரைவாக கிடைக்கப் பெறுமாயின் எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்திற்கு முன்னர் தேர்தலை நடாத்த முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய பல இடங்களிலும் அவரிடம் விடுக்கும் தேர்தல் எப்போது? என்ற கேள்விக்கு பதிலளித்து வருகின்றார்.
நாட்டில் அரசாங்கம் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் கழுத்தைத் தாண்டிச் சென்றுள்ளன என்று அரசியல் அறிவுள்ள ஒருவர் கூறினால், ஆளும் கட்சி ஆதரவாளர்களும் மறுக்க முன்வரமாட்டார்கள். மீத்தொடமுல்லை குப்பை மேடு சரிந்து விழுந்ததனால் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைக்குக் கூட இன்று வரை தீர்வு காணப்படாதுள்ளது. அந்த அனர்த்தத்தின் அடியாக எழுந்த கொழும்பு நகரின் குப்பைப் பிரச்சினைக்கும் இன்று வரை நிரந்த தீர்வை முன்வைப்பதில் அரசாங்கம் செய்வதறியாதுள்ளது. நாட்டின் தலைவர்களாகவுள்ள ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் தலையிட்டும் கூட இப்பிரச்சினைக்கு தீர்வு பெற முடியாத ஒரு இடியாப்பச் சிக்கலாக இப்பிரச்சினை இன்று மாறியுள்ளது. பிரதமரும், அமைச்சர்களும் குப்பைகள் போடப்பட்ட இடங்களை நேரில் சென்று பார்வையிட்டதன் பின்னர், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டும் கொழும்பில் இன்னும் குப்பை ஒரு பிரச்சினையாகவே இருந்து வருகின்றது.
மேல் மாகாணத்தில் டெங்கு அதிகமாக காணப்படும் ஒரு பிரதேசமாக கொழும்பு நகர் சுட்டிக்காட்டப்படுகின்றது. இப்பிரச்சினைக்கு அப்பகுதி மக்கள் அதிகம் முகம்கொடுப்பதற்கு குப்பைகளே காரணம் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன அண்மையில் கூறியிருந்தார். இந்த குப்பைப் பிரச்சினை தொடர்ந்தால், டெங்கு நோயால் மரணிப்பவர்களது எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த முடியாது போய்விடும்.
இதேவேளை, நாட்டில் நல்லாட்சி அரசாங்கம் மௌனம் காத்து வரும் தீர்க்க முடியாத ஒரு பிரச்சினையாக இனப்பிரச்சினை காணப்படுகின்றது. சிலபோது எரிந்தும், பின்னர் புகைந்து வரும் புரையோடிய பிரச்சினையாக இது மாறிவருகின்றது. இந்த இன, மத வாத நச்சுக் கருத்துக்களை விதைப்பவர்களின் பிரதான இலக்கு, முஸ்லிம் சமூகமாகவே உள்ளது. இந்த இன, மத தீவிரவாதிகளும் அரசாங்கத்திலுள்ள முக்கிய சிலர் மீதும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர். இதுவும் மக்கள் மத்தியில் அரசாங்கத்துக்கு எதிரான ஒரு மனப்பாங்கையே தோற்றுவித்துள்ளது. மத, இன வாதிகளினால் அரங்கேற்றப்படும் நிகழ்வுகளுக்கு அரசாங்கம் உடனடியாக தீர்வு வழங்க முன்வர தயங்கும் ஒவ்வொரு நிமிடமும் இந்நாட்டிலுள்ள பெரும்பான்மை இனவாத வாக்குகளும், பாதிக்கப்படும் சிறுபான்மை வாக்குகளும், இடையிலுள்ள பொதுவாக சிந்திக்கின்ற நடுநிலை மனப்பாங்குள்ள பெரும்பான்மை மக்களினது வாக்குகளும் அரசாங்கத்துக்கு இழக்கப்படுகின்றது என்பது ஒரு கசப்பான உண்மையாகும்.
சைட்டம் பிரச்சினைக்கு தீர்வு இன்று வரும்? நாளை வரும் என நாட்டு மக்கள் பகல்கனவு காண்கிறார்கள். சொகு அறைகளுக்குள் கலந்துரையாடி தீர்வு முன்வைப்பவர்கள் காத்திரமான முடிவை இதுவரை கொண்டுவரவில்லை.
நாட்டிலுள்ள இதர தொழிற்சங்கங்களும் பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளன. தங்களது நியாயமான கோரிக்கைகளுக்கு அரசாங்கம் செவிசாய்க்க வில்லையென்பதே அவர்களது வாதமாகவுள்ளது. தபால் சேவை ஊழியர்கள் தற்பொழுது தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர். இலங்கை மின்சார சபை ஊழியர்கள் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அரசாங்கத்துக்கு சிவப்பு சமிக்ஞை வழங்கியுள்ளது.
உள்ள தலைவலி போதாமைக்கு அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டத்துக்கு எதிராகவும் மக்கள் வீதியில் இறங்க ஆரம்பித்துள்ளனர். உமா ஓயா திட்டத்தினால் வீடுகளுக்கும் சொத்துக்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதையடுத்து பண்டாரவளை வாழ் மக்கள் ஒன்றிணைந்து பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
எதிர்வரும் எந்தவொரு தேர்தலும் நாட்டின் ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவராது போனாலும், அரசாங்கத்தின் நிலைப்பாடுகள் தொடர்பில் மக்களின் அபிப்பிராயம் எவ்வாறு காணப்படுகின்றது என்பதற்கான ஒரு கருத்துக் கணிப்பாக அமையும் என்பது அநேகமானவர்களின் எதிர்பார்ப்பாகும்.
தன்மீது தவறு இருப்பதாகவும், தனது நடவடிக்கைகளை மக்கள் அரங்கில் கருத்துக்கு விட முடியாத ஒரு நிலை காணப்படுவதாகவும் ஆய்வுகள் தெரிவிப்பதனாலேயே அரசாங்கம் தேர்தலுக்கு அஞ்சுவதாக எதிர்க் கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. அரசாங்கம் மக்கள் அரங்கில் தனக்குள்ள அபகீர்த்திகளை உடனடியாக சரிசெய்து கொள்ளாமல் சிறிய தேர்தல் ஒன்றுக்காவது முகம்கொடுக்குமாக இருந்தால், மக்கள் புகட்டும் பாடம் எவ்வாறு இருக்கும் என்பதை பார்த்து அரசாங்கம் நிச்சயம் நொந்துகொள்ளத்தான் போகின்றது என்பது மட்டும் உண்மையாகும்.
Post a Comment