குருதட்சணை...
அறபி (சுல்பிகார் நம்பாளிக்காரன்)
காட்டுவாசி
ஆடை நெய்து அணிவித்தவரை
இழந்து அலைகிறேன்
சூரியனை வரவேற்ற
காலைச்சேவல் நான்
கூவ மறந்தோடுகிறேன்
கவிதையெனும் கர்த்தரை
பெத்லகேமில் தரிசிக்க
பிரகாசமாகிய வால் நட்சத்திரமே
கல்லாகிப்போன கவிதையை
அகலிகையாக்கிய
ரகு(ரா)மான் நீங்கள்
கற்பினைக்காப்பாற்ற
கதறிய கவிதைக்குமரி
உங்களின் வரவால்
நிலமகள் மேனியை
வர்ணமாய் நீவினாள்
உங்களின் கவிதைக்குழந்தை
நெற்கதிரின்
மஞ்சள் பாத்திரங்களில் சமைந்த
கிராமத்து தாலாட்டுகள்
லைலாவின் காதல் தேடிய ஹயசைப்போல்
நீண்ட வன தவத்தில்
தமிழுக்கு கிடைத்த காதலரே
ஒயினின் மயக்கங்களில்
மனிதர்களை மறந்த கவிதையில்
வியர்வையை விதறியவரே
பாலுக்கு கதறிய தமிழுக்கு
புதுக்கவிதையாகி
மார் திறந்தவரே
நான் ஏசு
கவிதை என் சிலுவையென
தமிழ்கவிதைக்கு குறியீடானவரே
நீங்களொரு வித்தியாசமான துரோணர்
அதனால் தான்
பல கட்டை விரல்கள்
இன்னும் பத்திரமாய்
விலங்குகளை உடைத்து
கவிதையை கைப்பற்றிய அரசே
உங்களின் சாம்ராஜ்யம்
இன்று
காவேரியாய் அழுகிறது
Post a Comment