"முஸ்லிம் அடிப்படைவாதிகள் என்ற, எனது கருத்து திரிபுபடுத்தப்பட்டுள்ளது"
-SNM.Suhail-
அகில இலங்கை முஸ்லிம் லீக்கின் ஏற்பாட்டில் மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற நோன்புப் பெருநாள் நிகழ்வின்போது தான் பேசிய கருத்துக்கள் திரிபுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அரசியல் சுயலாபத்துக்காக தவறான கருத்துக்களை முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். அஸ்வர் பரப்புவதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளரும் அரச தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சருமான கபீர் ஹாசிம் தெரிவித்தார்.
கருத்தரங்கொன்றின் நிமித்தம் சீனாவுக்கு சென்றுள்ள அமைச்சர் கபீர் ஹாசிம், முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.அஸ்வர் ஊடகவியலாளர் மாநாடொன்றின்போது கூறிய கருத்தை மறுத்து விடிவெள்ளிக்கு தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்
மஹர சிறைச்சாலையில் உள்ள முஸ்லிம் கைதிகளுடனான நோன்புப் பெருநாள்தின பகற்போசன நிகழ்ச்சியொன்றை அகில இலங்கை முஸ்லிம் லீக் ஏற்பாடு செய்திருந்தது. முஸ்லிம் லீக்கின் தலைவர் என்ற ரீதியில் அதில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் கபீர்,
இன்று இஸ்லாத்தின் பெயரால் உலக நாடுகளில் இயங்கிக் கொண்டிருக்கும் பயங்கரவாதக் குழுவினரின் நடவடிக்கைகளால் உலகம் முழுவதிலுமுள்ள முஸ்லிம்கள் மீதே எதிர்ப்புக் கணைகள் வீசப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த சவாலை சமாளிக்க வேண்டிய நிலையிலே நாம் இருந்து கொண்டிருக்கிறோம்.
இதன் பின்னணியிலேயே இலங்கையில் பல பகுதிகளிலும் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் திட்டமிட்டு இடம் பெறுகின்றன. இதனால் எமது மக்கள் பெரும் அச்சத்துடனேயே வாழ்கின்றனர். இந்நிலையில் இருந்து நாம் விடுபட அரசியல் ரீதியிலானதொரு தீர்வு அவசியப்படுகின்றது.
இதேவேளை, சிறைச்சாலையில் உள்ளவர்கள் இன்று தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கிறீர்கள். சிறைக்கூடம் உங்களுக்கு நிரந்தர உரிமையிடமல்ல, அதாவது வறுமையோடு பிறந்தவர்கள் என்றும் வறுமையுடனே உழன்று கொண்டிருக்க வேண்டுமென்பதல்ல, அவர்கள் வாழ்வில் முன்னேறி நல்ல நிலையை அடையலாம். அதேபோன்று இன்று சிறைவாசம் அனுபவிப்பவர்கள் புனர்வாழ்வு பெற்று நாளை நாட்டின் நற்பிரஜைகளாகலாம். அவ்வாறு ஆகவேண்டும் என்பதே எமது ஆசைக்கூட.
சிறையிலிருந்து விடுதலை பெற்று நாம் அனைவரும் நாட்டின் நலனுக்காக உழைக்க முன்வரவேண்டும். எமது முன்னோடிகளான ரீ.பி.ஜாயா போன்றவர்கள் சிங்கள மகா சங்கம் மற்றும் தமிழ் காங்கிரஸ் அமைப்புகளுடன் கைகோர்த்து எத்தகைய நிபந்தனைகளுக்கும் அடிமைப்படாது நாட்டுக்கு சுதந்திரத்தைப் பெற்றுக்கொடுத்ததை இந்த இடத்தில் நினைவு படுத்த விரும்புகின்றேன்.
நீண்டகாலமாக சிறைத் தண்டனை அனுபவித்துக் கொண்டிருப்பவர்களுக்கு பொதுமன்னிப்பின் பேரில் நிரந்தரமாக விடுதலைப் பெற்றுக்கொடுப்பதற்கான வாய்ப்பொன்றை வழங்கக்கூடிய விதத்தில் அரசுக்கு அமைச்சரவைப் பத்திரம் ஒன்று வெகுவிரைவில் சமர்ப்பிக்கப்படவிருக்கிறது என்ற தகவலைத் அமைச்சர் இதன்போது வெளியிட்டார்.
அமைச்சர் கபீர் ஹாசிமின் கருத்து கண்டனத்துக்குரியது என குறிப்பிட்டு நேற்றுமுன்தினம் கூட்டு எதிர்க்கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த முன்னாள் முஸ்லிம் விவகார அமைச்சரும் முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் செயலதிபருமான ஏ.எச்.எம். அஸ்வர்.
முஸ்லிம்களுக்குள் அடிப்படைவாதிகள் இருப்பதாகக் கூறுவது பொதுபலசேனா போன்ற இனவிரோத சக்திகளின் வாய்களில் அவல் போட்டது போன்று இருக்கும்.
ஆயிரம் பொய் சொல்லி அரசாங்கத்தைக் கைப்பற்றிய இந்த நல்லரசு என்று சொல்லப்படுகின்ற பொல்லரசுக்கு முஸ்லிம்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. முஸ்லிம் அமைச்சர்களும் கையாலாதவர்களாக இப்போது ஆகிவிட்டனர். ஆகவே அதற்குப் பரிகாரம் தேடாமல், முஸ்லிம்களுடைய பிரச்சினைகளைத் தீர்க்காமல் இவர்கள் முஸ்லிம்களுக்குள் அடிப்படைத் தீவிரவாதிகள் இருப்பதாக கூறுவது மிகவும் அபத்தமான கூற்றாகும்.
முஸ்லிம்கள் பின்பற்றுவது அடிப்படையான இஸ்லாமிய கொள்கைளைத்தான். எனினும், தனிப்பட்ட நபர்கள் செய்கின்ற குற்றங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கலாம், தண்டனை விதிக்கலாம். அதை விடுத்து முஸ்லிம்களுக்குள் தீவிரவாதிகள் இருப்பதாகச் சொல்லுவது, இதுபோன்று கூறி வருகின்ற பொதுபல சேனா போன்ற இனவிரோத சக்திகளுக்கு வாய்களில் அவல் போட்ட விஷயமாகத்தான் நாம் இதனைப் பார்க்க முடிகின்றது.
எனவே, இதனை அவர் வாபஸ் பெற வேண்டும். இப்படியாக செய்வதன் மூலம் முஸ்லிம் சமுதாயத்தையே இழிவு படுத்துவதாக அமையும் என நாங்கள் கருதுகிறோம் என்றும் தெரிவித்தார்.
முன்னாள் அமைச்சர் அஸ்வர் இவ்வாறு குற்றச்சாட்டுகள் முன்வைத்ததை மறுத்து அமைச்சர் கபீர் ஹாசிம் சீனாவிலிருந்து விடிவெள்ளிக்கு கருத்து தெரிவிக்கையில்,
மஹிந்த அணியின் பக்கம் முஸ்லிம்களை ஈர்ப்பதற்கு எம்மீது வீண் பழிகளை முன்னாள் இராஜாங்க அமைச்சர் அஸ்வர் தெரிவித்து வருகிறார். அக்கருத்து கண்டனத்துக்குரியதாகும்.
தமது சுய நலத்துக்காக அவர் இவ்வாறான கருத்துக்களை வெளியிடுவது மிகவும் பாரதூரமானதாகும். குறிப்பாக நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகள் அதிகரித்திருக்கின்ற சூழலில் அதனை மேலும் அதிகரிக்கச் செய்யும் செயற்பாட்டை முன்னாள் அமைச்சர் அஸ்வர் மேற்கொள்கிறார்.
அத்துடன் அவர் முஸ்லிம்களை தூண்டிவிடும் நோக்கிலேயே இவ்வாறான கருத்துக்களை பரப்புகிறார். இதுபோன்ற சுயநல நோக்கான கருத்துக்கள் சமூகத்தை ஆபத்தான கட்டத்திற்கே இழுத்துச் செல்லும். மூத்த அரசியல்வாதியான அஸ்வர் மிகவும் பொறுப்பனர்வுடன் நடந்துகொள்ள வேண்டும் என்றார்.
Post a Comment